பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2 மாணவர்கள் பலி

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:06


பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பாவூர்சத்திரத்தை அடுத்த முத்துமாலை புரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பிரவீன்(12), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். பிரவீனுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்தது. பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் அதிகரித்ததால் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு பிரவீன் பரிதாபமாக இறந்தான்.

மற்றொரு மாணவர் சாவு

பாவூர்சத்திரத்தை அடுத்த செட்டியூர் ராமசாமி கோயில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் மதுரூபன்(8), பாவூர்சத்திரம் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.  மதுரூபனுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு இருந்து. தனியார் ஆஸ்பத்திரியில் மதுரூபன் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த போது மாணவனுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மதுரூபனை மேல் சிகிச்சைக்காக பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுரூபன் பரிதாபமாக இறந்தான்.

பாவூர்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.