37 ஆண்டுக்கு பிறகு நாகர்கோவில் நகராட்சி கடைகள் ஏலம்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 07:51நாகர்கோவில்:

நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஏலம் விடப்பட்டன.

நாகர்கோவில் நகராட்சிக்கு வடசேரி பஸ் ஸ்டாண்ட், அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மட்டும் சுமார் 150 கடைகள் உள்ளன. நகரின் பிறபகுதிகளில் உள்ள கடைகளையும் சேர்த்து நாகர்கோவில் நகராட்சிக்கு 300 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் ஏறத்தாழ 1980ம் ஆண்டு வாக்கில் ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்பிறகு சுமார் 37 ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் ஒரே நபரிடம் இந்த கடைகள் உள்ளன. கடையை ஏலம் எடுத்த பலர் இறந்துவிட்டனர். இருப்பினும் பெயர் மாற்றப்படாமல் இறந்தவர்கள் பெயரில் வாடகை செலுத்தப்பட்டு இன்றளவும் கடை இயங்கி வருகிறது. சில கடைகளை யார் வாடகைக்கு வைத்திருக்கிறார்கள் எனவும் நகராட்சிக்கு தெரியாத நிலை இருந்துவந்தது. அதிலும் 37 ஆண்டுக்கு முந்தைய ஏலத்தின் அடிப்படையில் மிகக்குறைந்த வாடகையே செலுத்தி  வருகின்றனர். முக்கிய பகுதிகளில் இயங்கும் கடைகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தும் நிலையும் உள்ளது. கடை வாடகைக்கு எடுத்தவர்கள் அதில் ஒருபகுதியை  உள்வாடகைக்கு விட்டு தனியாக பணம் சம்பாதித்து வருவதாக நகராட்சிக்கு புகார்கள் சென்றன. சிலர் ஐந்தாறு கடைகளை எடுத்து அதில் சில கடைகளை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம் 300 கடைகளையும் மறு ஏலம்விடும் நோக்கத்துடன் கடந்த ஜூலை மாதம் 21ம் தேதிக்குள் குத்தகைதாரரின் பெயர், முகவரி, மொபைல் எண், கடை எண் மற்றும் பரப்பளவு, குத்தகை உரிமம் உத்தரவு நகல் அல்லது குத்தகை உரிமம் பெயர் மாற்ற நகல் முன் வைப்புதொகை செலுத்திய விபரம் மறும் ரசீது நகல், தொழில்வரி செலுத்திய ரசீது, ரேஷன் கார்டு அல்லது அடையாள அட்டை என சுமார் 16 விபரங்களை நகராட்சிக்கு தெரிவிக்கும்படி அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இருவர் ஒரு கடைக்கு உரிமை கோருவது போன்ற மனுக்களும் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளன. இந்த நிலையில் வாடகைக்கு எடுத்து 9 ஆண்டுக்கு மேல் ஆன 144 கடைகள் நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சரவணகுமார் தலைமையில் நேற்று ஏலம் நடந்தது. இதற்காக நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் இதுவரை மாதம் சுமார் 7 ஆயிரம் ரூபாய் மாதவாடகை செலுத்திவந்த ஒரு ஓட்டல் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகைக்கு ஏலம் போனது. ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக 2 லடசம் ரூபாய் செலுத்துவதுடன், ஒரு வருடத்துக்கான வாடகை தொகையினையும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். இதன்படி நேற்று நடந்த ஏலத்தில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் உள்ள சுமார் 50 கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் நேற்று ஏலம் போனது. அண்ணா பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு இன்று காலை 10.30 மணியளவில் ஏலம் நடக்கிறது. நகராட்சி கடைகள் மறு ஏலம் விடப்பட்டதால் நாகர்கோவில் நகராட்சிக்கு மாதம்தோறும் கிட்டத்தட்ட ஒருகோடிரூபாய் வரை வருவாய் வர வாய்ப்பு உள்ளது.

* மூடப்பட்ட சாலைகள்:

நாகர்கோவில் நகராட்சி கடைகள் ஏலம் விடப்பட்டதன் காரணமாக நேற்று நகராட்சி அலுவலக வளாகத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. இதனால் அனைத்து வாகனங்களும் வேறு பாதைகளில் சுற்றி சென்றன.

* தவறான மனு:

நாகர்கோவில் நகராட்சி கடைகளை ஏலம் எடுப்பதற்காக பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் பெறுனர் முகவரியில் பலர் தேர்தல் அதிகாரி எனவும், வேறு பல தவறான தகவல்களையும் எழுதியிருந்தனர். இதானால் சில மனுக்களை கமிஷனர் சரவணகுமார் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டது.