மகள் கண் முன்பு நடந்த கொடூரம்: பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 08:22


சென்னை:

சென்னை குமரன் நகரில் மகள் கண் முன்னே ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலையை அரங்கேற்றிய கூலிப்படையினரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் நாயக்கமார் தெருவில் வசித்து வருபவர் கந்தன் (வயது 53). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் அந்த பகுதியில் கேபிள்டிவி நடத்தி வந்ததால் பிரபலமானவர். இவரது மனைவி புவனேஸ்வரி (48). இவர்களுக்கு கீர்த்தனா (20) என்ற மகளும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். கீர்த்தனா அடையாறில் உள்ள கல்லுாரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கந்தன் வழக்கம் போல தனது மகள் கீர்த்தனாவை  கல்லூரியில் விடுவதற்காக தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

வீட்டில் இருந்து புறப்பட்டு

மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையில் வந்த போது அடையாளம் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி ஒரே பைக்கில் வந்த   3 நபர்கள் கந்தன் பைக் மீது தங்கள் பைக்கை வேமாக மோதினர். இதில் கந்தனும், கீர்த்தனாவும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் கந்தனை சூழ்ந்து நின்று அரிவாளால் அவரது தலையில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதிர்ச்சியடைந்த தடுத்த கீர்த்தனாவின் கையிலும் வெட்டு விழுந்தது. ரத்தவெள்ளத்தில் கந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு பைக்கில் வந்த 3 பேரில் 2 பேர் தயாராக நின்ற ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர். பைக்கில் வந்த வாலிபரும் தப்பியோடிவிட்டார்.

மிகவும் குறுகலான சாலையான ஏரிக்கரைத் தெருவில் இந்த கொலை நடந்தது. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலையைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு நாலா திசையிலும் சிதறி ஓடினர். தகவல் கிடைத்ததும் குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயத்துடன் மயங்கி கிடந்த கீர்த்தனாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குமரன் நகர் போலீசார் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். கொலையாளிகள் சர்வ சாதாரணமாக வந்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் துறை அதிகாரி ஷோபியா வந்து தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்றது.

கொலை செய்யப்பட்ட கந்தன் முன்னதாக சைதாப்பேடையில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

கொலையில்  லோகநாதனுக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் குமரன் நகர் போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.

லோகநாதன், கந்தன் ஆகியோர் மீது சைதாப்பேட்டை போலீஸஅ நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூலை மாதம் லோகநாதனை மாம்பலம் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக தாம்பரத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் வைத்து கைது செய்தனர். பிறகு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். லோகநாதனை போலீசுக்கு காட்டிக்கொடுத்தது கந்தன் தான் என்று இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் கொலை செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.