நெல்லை, மேலப்பாளையத்தில் திடீர் மழை 10க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கிய நீர்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 09:04


திருநெல்வேலி:

நெல்லை, மேலப்பாளையத்தில் நேற்று பெய்த திடீர் மழையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. திடீர் மழையால் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றது.

நெல்லையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழை விட்டு, வெயில் அடித்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் திடீர் மழை பெய்ய துவங்கியது. இந்த மழை காலை 9 மணி வரை விட்டு விட்டு நீடித்தது. இதனால் மேலப்பாளையம், குறிச்சி, குலவணிகர்புரம் பகுதியில் மழைநீர் தேங்கியது. குறிச்சி வசந்தாபுரம், அழகிரிபுரம், ஜெபாநகர், மேலகுலவணிகர்புரம், ஹேப்பி காலனி பகுதிகளில் மழைநீர் வெளியே வழியில்லாமல் ௧௦க்கும் மேற்பட்ட தெருக்களில் குளம் போல தேங்கி நின்றது.

மேலகுலவணிகர்புரம் ஜெபமாளிகை தெருவில் 1 முதல் 3 தெருக்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் தண்ணீர் இடுப்பு அளவிற்கு தேங்கியது. வீடுகளுக்குள்ளாகவும் தண்ணீர் புகுந்தது.

அப்பகுதியில் கணபதி என்பவர் வீடு இடிந்து விழுந்தது. ஜெபாநகரில் ராஜகனி வீட்டுச்சுவரும் இடித்தது. ஹேப்பி காலனி, வசந்தாபுரம், அழகிரிபுரம் பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். பள்ளிகளின் வளாகத்திலும் மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

௩௦வது வார்டு அழகிரிபுரத்தில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேக்கம் அடைந்தததாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் அப்பகுதி மக்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன்பு ரோட்டில்

திடீர் ரோடு மறியிலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்புக்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வலியுறுத்தி மக்கள் கோஷம் எழுப்பினர். நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

பள்ளிக்கு லீவ் உண்டா?.

நெல்லை, பாளை., பகுதிகளில் நேற்று திடீரென பலத்த மழை பெய்ததால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவா, வேண்டாமா எனச் செய்வதறியாமல் திகைத்தனர். பள்ளிக்கு லீவு உண்டா என தெரிந்தவர்களிடமும், பத்திரிகை அலுவலகங்களும் போன் செய்து கேட்டனர். பலர் வாட்ஸ்–அப்பில், ‘பள்ளிக்கு லீவு உண்டா மெசேஜ் மூலமாக கேட்டுக் கொண்டே இருந்தனர்.