தாயை கொலை செய்த கொடூரன் ஜஸ்வந்த் மும்பையில் கைது

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 08:17


சென்னை:

சூதாடுவதற்கு பணம் தர மறுத்த தாயை அடித்துக் கொன்ற கொலைகாரன் ஜஸ்வந்த்தை சென்னை தனிப்படை போலீசார் மும்பையில் வைத்து கைது செய்தனர். விபசார அழகி வீட்டில் தங்கியிருந்த அவனை குதிரைரேஸ் மைதானத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

 சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி. கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக்  கொண்டிருந்த போது திடீரென மாயமானர். இது குறித்து ஹாசினியின் தந்தை பாபு குன்றத்துார் போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி ஹாசினி வசித்து வந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்ற இளைஞர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜஷ்வந்த் மீது போலீசார் குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தனர். ஜஷ்வந்தின் தந்தை சேகர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவர் மீதான  குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.  ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.

சாப்ட்வேர் இன்ஜினியரான ஜஸ்வந்த் கொலை வழக்கில் சிக்கியபின் வேலையின்றி ஊதாரித்தனமாக மது போதை, சூதாட்டம் என சுற்றித்திரிந்துள்ளான். அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தான். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று சூதாட பணம் கேட்டு தர மறுத்ததால், தனது தாய் சரளாவை ஈவு இரக்கமின்றி இரும்புக் கம்பியால் தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்தான். பின்பு அவர் கழுத்தில் அணிந்திருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டில் இருந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டான்.

இந்த சம்பவம் சென்னை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜஸ்வந்தின் தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் குன்றத்துார் போலீஸார் வழக்குப்பதிவு ஜஸ்வந்தை தேடி வந்தனர்.  மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஜஸ்வந்தை தீவிரமாக போலீசார் தேடியும் அவன் எங்குள்ளான் என்பது பற்றிய விவரம் தெரியவரவில்லை.

அவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவனுடன் நெருங்கிப் பழகிய கொல்கத்தாவை சேர்ந்த விபசார புரோக்கர் ராஜ்குமார் தாமஸ் என்பவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஜஸ்வந்த் செங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் தாயிடம் கொள்ளையடித்த நகையை பணமாக மாற்ற கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவனது செல்போன் அழைப்புக்களை வைத்து ஆய்வு செய்ததல் ஜஸ்வந்த் மும்பைக்கு தப்பிச்சென்று அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

ஜஸ்வந்த் பிடிபட்டது பற்றி தனிப்படை அதிகாரி சொன்ன சுவாரஷ்ய தகவல்கள்:

கடந்த 6 நாட்களாக போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக இருந்த ஜஸ்வந்த் பிடிபட்டது எப்படி என்பது பற்றி தனிப்படை அதிகாரி ஒருவர் கூறிய சுவாரஷ்ய தகவல்கள். ‘‘ஜஸ்வந்த் தப்பியோடிய நாள் அன்று முதல் சென்னையில் உள்ள அவனது நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தினோம். ஆனால் அவன் அங்கு எங்கும் செல்லவில்லை. எங்கு போனாலும் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்பதில் அவன் உறுதியாக இருந்துள்ளான். அதனால் சென்னையை விட்டு வெளியூர் சென்றிருக்கலாம் என கருதினோம். ஆகவே அந்த கோணத்தில் விசாரணையை திருப்பினோம். மேலும் முக்கியமாக அவன் வீடு அமைந்துள்ள இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஒன்று விடாமல் ஆய்வு செய்யப்பட்டன. அதில் அவன் தப்பிச்செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தன. அவன் சென்ற திசையை கணக்கிட்டு அந்த பகுதிகளில் சில பிரயோஜனமான சிசிடிவி பதிவுகள் கிடைத்தன. அடுத்தடுத்து அவன் சென்ற இடங்களில் கிடைத்த கேமரா பதிவுகள் அடிப்டையில் அவன் சென்ற இடங்களை பின்தொடர்ந்த போதுதான் அவன் சென்னையை விட்டு வெளியூருக்கு சென்றதை உறுதி செய்தோம்.

கடைசியாக அவன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றதும், அங்கிருந்து அவன் ரயில் மூலம் வடமாநிலத்துக்கு சென்றதையும் கண்டுபிடித்தோம். இதனையடுத்து ஜஸ்வந்த் கடைசியாக தனது செல்போனில் பேசிய நபர்களின் கால் டீடெய்ல் விவரங்களை சேகரித்தோம். அதில் ஜஸ்வந்த் கொலை செய்த மறுநாள் சென்னையைச் சேர்ந்த விபசார புரோக்கர் ராஜ்குமார் தாமஸ்சிடம் நெடுநேரம் பேசியது தெரியவந்தது. அதன் பேரில் ராஜ்குமார்தாமசை பிடித்து விசாரணை நடத்திய போது, ‘‘மும்பை தார்டியாவில், செப்பூர் என்ற இடத்தில் உள்ள எனக்கு நெருக்கமான விபசார அழகி ஒருவரது வீட்டில் சென்று தலைமறைவாக இருக்கும்படி கூறினேன். அதனால் ஜஸ்வந்த் மும்பைக்கு சென்றிருக்கலாம்’’ என தெரிவித்தான். விபசார புரோக்கர் கொடுத்த அந்த தகவல்தான் முக்கிய துருப்புச் சீட்டாக ஜஸ்வந்தை பிடிக்க பயன்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பே தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்று விபசார புரோக்கர் சொன்ன முகவரிக்கு சென்று ரகசியமாக கண்காணித்தோம்.

ஆனால் அங்கு ஜஸ்வந்த் சிக்க வில்லை. இருப்பினும் புரோக்கர் சொன்ன இடத்தில் தொடர்ந்து கண்காணித்தோம். ஜஸ்வந்துக்கு சூதாடுவது, விபசார பெண்களுடன் செல்வது போன்ற பழக்கங்கள் இருப்பதால் அங்குள்ள சூதாட்ட கிளப்புக்கள், மது பார்கள்,விபசார விடுதிகள் போன்றவற்றில் கடந்த 3 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினோம். கடைசியில் நேற்று மாலையில் செப்பூரில் குதிரை ரேஸ் நடக்கும் இடத்தில் ரேசுக்கு பணம் கட்டி விட்டு வெளியில் வந்த போது மடக்கிப் பிடித்தோம். தாடியுடன் மங்கி குல்லா அணிந்தபடி வித்தியாசமான கெட்அப்பில் அவன் இருந்தாலும் தனிப்படை போலீசார் அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். பிடிபட்டதும் மிகவும் பதட்டமாக காணப்பட்ட அவனுக்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனை விமானத்தில் சென்னை கொண்டு வந்த பின்பு விரிவான விசாரணை நடத்தவுள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

‘மும்பை போலீசாருடன் லடாய்’

ஜஸ்வந்தை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்த போது அவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளான். அதனால் போலீசார் அவனை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியுள்னர். அப்போது அங்கு வந்த மும்பை ரோந்து போலீசார் வாலிபரை கடத்த முயல்கிறீர்களா என சந்தேகப்பட்டு சென்னை போலீசாரை பிடித்துக் கொண்டனர். இதனால் சென்னை போலீசுக்கும் மும்பை போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஜஸ்வந்த் கொலை வழக்குப் பற்றிய விவரங்களை கூறிய பின்னர் அவனை செப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு பின்னர் சென்னைக்கு அழைத்துச் செல்ல சொல்லி மும்பை போலீசார் தெரிவித்தனர். அதன் பேரில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் தங்களது கஸ்டடிக்கு கொண்டு வந்தனர்.