குறும்பட இயக்குநரை காரில் கடத்திய 6 பேர் கும்பல் கைது

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 08:15


சென்னை:

சென்னை திருமங்கலத்தில், சூட்டிங் கேமராவை வாடகைக்கு வாங்கிச் சென்று தலைமறைவான குறும்பட இயக்குநரை காரில் கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 6 பேர் கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– சென்னை அம்பத்தூர் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கேசவ் (வயது 29). குறும்பட இயக்குனர். நேற்று முன்தினம் இரவு கேசவ் திருமங்கலம் வசந்தம்காலனி பகுதி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் அவரை அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்றனர். இதனை பார்த்த கேசவ்வின் நண்பர் சுரேஷ் அதிர்ச்சியடைந்து கேசவ்வின் தந்தை சந்திரசேகருக்கு போன் செய்து தெரிவித்தார். உடனடியாக அவர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மகன் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தார்.

இது குறித்து திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கேசவ்வின் செல்போன் சிக்னலை வைத்து கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஆகாசும் குறும்பட ஒளிப்பதிவாளர் என தெரியவந்தது.

அவர் அளித்த தகவலின் பேரில் கடத்தலில் ஆகாஷின் கூட்டாளிகளான குறும்பட இயக்குனர்கள் சாலிகிராமத்தைச் சேர்ந்த மனோஜ், சின்மயா நகரைச் சேர்ந்த சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மனோஜும், சங்கரும்தான் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

கடத்தப்பட்ட கேசவ்வை சாலிகிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று கேசவ்வை மீட்டுவருவதற்காக அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் கேசவ்வை மட்டும் விட்டு விட்டு மனோஜ், சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் தங்கராஜ், கவுதம் ஆகியோர் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர். சங்கர் மட்டும் பிடிபடாமல் தலைமறைவானார். இந்நிலையில் சங்கர் போலீசில் இருந்து தப்பிக்க திட்டம் ஒரு திட்டம் போட்டுள்ளார். கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் செல்லும்போது, தன்னுடைய நகையை கேசவ் பறித்துச் சென்று விட்டதாக கூறி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சங்கர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த விவரம் திருமங்கலம் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் உடனடியாக அங்கு சென்று சங்கரை கைது செய்தனர். பிறகு விசாரணையில் நகைபறிப்பு சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நகையை அவரே மறைத்து வைத்துக் கொண்டு நாடகமாடியதும் தெரிந்தது. இது குறித்து சங்கர் மீது விருகம்பாக்கம் போலீசார் பொய்ப்புகார் கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைதான சங்கரிடம் திருமங்கலம் போலீசார் கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. கடத்தப்பட்ட கேசவ், மனோஜ் மற்றும் சங்கர் ஆகியோரிடம் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 2 கேமராக்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வாங்கிச் சென்றுள்ளார். ஆனால் அதற்குரிய வாடகையை தராமல் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து கேசவ் மீது சங்கர், மனோஜ் ஆகியோர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விட்டு கைது நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் மனோஜ், சங்கர் தனது நண்பர்களான ஆகாஷ், தங்கராஜ், கவுதம் ஆகியோருடன் சேர்ந்து கேசவ்வை கடத்தி கேமராவை மீட்க முயன்றுள்ளனர். இது போன்ற விவரங்கள் கைதான நபர்களின் வாக்குமூலத்தில் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. சினிமாவில் வருவது போலவே கடத்தல் சம்பவத்தை 6 பேரும் சேர்ந்து அரங்கேற்றியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் கடத்தப்பட்ட குறும்பட இயக்குனரை 4 மணி நேரத்தில் மீட்ட திருமங்கலம் போலீசாரை  கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டினார். கைதான 5 பேரையும் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.