வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: 5 பேர் ஆதாரம் இல்லாததால் விடுவிப்பு

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 08:11

சென்னை:

ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக வந்த ரகசிய தகவலின் பேரில் 6 பேரை தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். ஆனால் அவர்களிடம் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படாததால் ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர்.

சென்னை ஆர்கே நகரில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை பறக்கும் படையினர் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர். ஆர்கே நகரில் மூளை முடுக்குகளில் எல்லாம் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் பணப்பட்டுவாடா எதுவும் நடக்கிறதா என கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகில் நேற்று காலை 11 மணியளவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா ரகசியமாக நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தேர்தல் அதிகாரிகள் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வெளி மாவட்ட பதிவெண் கொண்ட 3 கார்களை  போலீசார் மடக்கினர். அந்த காரை கொறுக்குப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். காரில் இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில் குமார் (வயது 41), ஆற்றல் அழகன் (52),  ரமேஷ் (45), ஆசைத்தம்பி  (48), சண்முகவேல் (30) ஆகிய 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் என தெரியவந்தது. இதனையறிந்த தினகரனின் ஆதரவாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு போடுவதாக கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பிடித்து வந்த 5 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களிடம் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் எதுவும் அவர்களிடம் சிக்காததால் அவர்கள் 5 பேரையும் போலீசார் விடுவித்தனர். 3 கார்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் கொருக்குப்பேட்டை பகுதியில் நேற்று காலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.