7 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு: அரையாண்டு தேர்வு நடக்கும்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 07:35

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட ஒகி புயல் காரணமாக கடந்த 30ம் தேதி மற்றும் டிசம்ர் 1ம் தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் கடந்த 4ம் தேதி கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவுக்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகும் சீரமைப்பு பணிகள் நிறைவடையாததால் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் கூடுதலாக இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (டிச.7) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என கலக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒகி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைத்திடும் விதமாக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.      பள்ளி வளாகத்தில் வீழ்ந்துள்ள மரங்களை இரண்டு தினங்களில் முழுமையாக அப்புறப்படுத்தி மாணாக்கர்களின் கல்வி நலன் பாதிக்காத அளவில் பள்ளியினை சீர் செய்திட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை, புயல் காரணமாக காணாமல் போன மற்றும் சேதமடைந்த பள்ளி மாணாக்கர்களின் புத்தகங்கள், சீருடை, நோட்டு புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த தலைமையாசிரியர் வழி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அனைத்து பொருட்களும் புதிதாக மாணாக்கர்களுக்கு வழகப்பட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். மேலும் அனைத்து பள்ளிகளும் 07.12.2017 முதல் வழக்கம் போல் நடைபெறும். மழை, புயல் சேதம் காரணமாக இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி சான்றிதழ்கள் சேதம் அடைந்திருப்பின் அது குறித்த விவரங்களை உரிய அலுவலரிடம் சான்று பெற்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவற்றுக்கான இரண்டாம்படி நகல் பெற்று வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.