புயல் நிவாரண பணியை துரிதபடுத்தாவிட்டால் போராட்டம் :ஐந்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 07:34

நாகர்கோவில்:

புயல் நிவாரண பணியை துரிதபடுத்தாவிட்டால் மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்துவோம் என குமரி மாவட்ட 5 எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தின் எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது, குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலால் அனைத்து மக்களும் பாதிக்கும் அளவுக்கு, வாழ்வாதாரங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த கணக்கும் எடுக்காமல் உள்ளது. காணாமல்போன, உயிரிழந்த மீனவர்கள் விபரமோ, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் நிலங்கள் பற்றி எந்த கணக்கும் எடுக்கவில்லை. நாங்கள் 6 எம்.எல்.ஏ.க்கள் புயல் நிவாரண பணி பற்றி அரசுக்கு எடுத்து சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மீனவர்களை ஹெலிகாப்டரில் கண்டுபிடிக்கவும், 15 லட்சமும் இழப்பீடு கொடுத்தார்கள். அதுபோல குமரியில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து அதிக நிதியை பெற்றுதந்திருக்க வேண்டும். ஆனால் அவர் சரியாக செயல்படவில்லை. மக்கள் வீட்டை இழந்து நடு வீதியில் இருக்கிறார்கள். கடலில் சென்றவர்கள் எங்கு போனார்கள் என தெரியவில்லை. ஆனால் முதல்வர் வராமல் அமைச்சர்களையும், துணை முதல்வரையும் அனுப்பிவிட்டு இருக்கிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து இந்த மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க முடியாது என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பா.ஜ., ஆளும் மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்துள்ளனர். குமரியில் ஊர்மக்களுக்கு தண்ணீர் வழங்க ஜெனரேட்டர் அனுப்புகிறார்கள், அதில் டீசல் இல்லை. மக்கள் விலை கொடுத்து டீசல் கொடுத்து வாங்குகிறார்கள். குமரியில் 500க்கும் அதிகமான படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மாவட்ட நிர்வாகத்துக்கு சொல்லி, மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு சொல்லியிருந்தால் இழப்பை சமாளித்திருக்கலாம். இப்போது அனைத்து கிராமங்களிலும் மின் கம்பங்கள் உடைந்தது அப்படியே கிடக்கின்றன. முகாமில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டனர். கலெக்டரிடம் போனில் பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் சரியாக செயல்படாமல் இருந்தால் நாங்கள் மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மனு வாங்க கவர்னரா ?

எம்.எல்.ஏ.க்கள் மேலும் கூறுகையில், தமிழக கவர்னர் கோவையில் ஆய்வுகூட்டம் நடத்தியதையே தி.மு.க., காங்., கட்சிகள் கண்டித்தன. ஆனால் இப்போது குமரி மாவட்ட மக்களிடம் மனு வாங்க கவர்னர் வருகிறாராம். மனு வாங்குவது முதல்வர் வேலை. ஆனால் தமிழர்களின் உணர்வை தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது. என்றனர்.