ஆர்.கே.நகர் தேர்தலில் தங்ககாசு கிளப்பிவிடுகிறார் சீமான்

பதிவு செய்த நாள் : 05 டிசம்பர் 2017 08:10

துாத்துக்குடி:

 ஆர்.கே. நகர் தேர்தலில் தங்ககாசு கொடுக்க போவதாக பேச்சு அடிபடுகிறது என்று சீமான் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமானம் மூலம் துாத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை. இரண்டாயிரம் மீனவர்களை காணவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் அரசு ௫௦௦ பேர் தான் என்கின்றனர். பெரிய கடற்படையை வைத்து கொண்டு மீனவர்கள் எங்கு சென்றார்கள் என்று கூறத் தெரியாத நிலையில் இருக்கிறோம்.

நம் நாட்டில் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். ஆனால் ஒரு பேரிடர் ஏற்பட்டால் அதில் இருந்து மக்களை பாதுகாக்க எந்த வசதியும் இல்லை. பொருளாதார வளர்ச்சி மட்டும் வளர்ச்சி கிடையாது. வலிமை மிக்க கடற்படை இந்தியாவிடம் உள்ளது. கடலுக்குள் உளவு பார்க்கும் ஆற்றல் இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் உள்ளது. மீனவர்கள் எங்கு சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாதா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை மின்சாரம் வரவில்லை என்று கூறுகிறார்கள். இந்த மாவட்டம் துண்டிக்கப்பட்ட தீவாக மாறி விட்டது. பணமில்லா பரிவர்த்தனை என்றார்கள். ஒருவாரம் மின்சாரம் இல்லை. எப்படி செல்போனில் பணம் பரிவர்த்தனை செய்வது. இதைத்தான் வளர்ச்சி என்று கூறுகிறார்கள்.

தமிழகத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் உடனடியாக சென்று பிரதமர் பார்வையிடுகிறார். நிவாரணம் அளிக்கிறார். ஆனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. குமரி மாவட்ட மக்கள் அனாதை போல் நிற்கிறார்கள். அந்த மண்ணில் அமைச்சர் அந்தஸ்து பெற்றவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். நடிகர் விஷால் தியானம் செய்கிறார். அது என்ன தர்மயுத்தமோ தெரியவில்லை. தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். அங்கு தங்ககாசு கொடுக்க போகிறார்கள் என்கிற பேச்சு அடிபட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.