திருச்செந்துார் கோயிலில் டிச. 16 முதல் பூஜை காலங்களில் மாற்றம்

பதிவு செய்த நாள் : 05 டிசம்பர் 2017 08:09

திருச்செந்துார்:

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி வரும் 16ம் தேதி முதல் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி வரும் 16ம் தேதி முதல் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளன. அன்றைய தினம் முதல் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனையும், இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை, நடைதிருக்காப்பிடுதல் நடக்கிறது.

புத்தாண்டு தினமான ஜன.  1ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தீபாராதனை மற்ற பூஜை காலங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன. 2ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. தை பொங்கலை முன்னிட்டு ஜன, 14ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மற்ற பூஜை காலங்கள் தொடர்ந்து நடக்கிறது.

இத்தகவலை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.