மழை பெய்தும் சீவலப்பேரி குளம் நிரம்பவில்லை: தென்காசி பகுதி மக்கள் புலம்பல்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:59

தென்­காசி:

தென்காசி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் பெருகி வரும் நிலையில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் சீவலப்பேரி குளம் நிரம்பாததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. தொடர் மழையின் காரணமாக விவசாயிகளுக்கு பாசன குளமாக விளங்கி வரும் கீழப்பூலியூர் பெரியகுளம், தென்காசி பழைய ஆஸ்பத்திரி பின்புறம் வழியாக செல்லக்கூடிய கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால், தென்காசிக்கு அருகில் சிறு குறு கிராம பகுதிகளில் உள்ள பாசன குளங்களுக்கு தண்ணீர் சீராக செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தென்காசி ரயில்வே பீடர் ரோடு– இலஞ்சி செல்லும் ரோட்டில் அமைந்துள்ள சீவலப்பேரி குளம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது. இந்த குளத்தில் தண்ணீர் இருப்பதால் தென்காசி பகுதியில் நிலத்தடி நீரும் சீராக இருக்கும்.

இந்த குளத்தில் இருந்துதான் காசிவிசுவநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்வது வழக்கம்.

கடந்த சில வருடங்களாக மழை குறைவு, குளத்தின் கரைப் பகுதிகளில் குப்பைகளை கொட்டுதல், நகர் பகுதிகளில் பெரிய சாக்கடைகளின் கழிவு நீர் நேரடியாக கலப்பதால் சீவலப்பேரி குளம் தொற்று நோய்களை பரப்பும் குளமாக மாறிவிட்டது. கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் பெருகி வருவதற்கு சுகாதாரமற்ற நிலையில் இருந்து வரும் சீவலப்பேரி குளமும் ஒரு காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி சுற்றுப்பகுதியில் நல்ல மழை பெய்தும் சீவலப்பேரி குளத்திற்கு தண்ணீர் வரத்து சீராக இல்லை. இதனால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் குட்டை போல் காட்சியளிக்கிறது.சீவலப்பேரி குளத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து பாதைகளில் செடிகள், முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதாலும், குப்பைகள் அதிக அளவில் கிடப்பதாலும் தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.சீவலப்பேரி குளத்திற்கு தண்ணீர் சீராக வரும் வகையில் ஆக்ரமிப்புகளை அகற்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.