முதல்வர், கலெக்டரை அவதூறாக சித்தரிப்பு: கைதான கார்ட்டூனிஸ்ட் ஜாமினில் விடுவிப்பு

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:56


திருநெல்வேலி:

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர், கலெக்டரை அவதூறாக சித்தரித்து கார்ட்டூன் வரைந்து இணையதளத்தில் வெளியிட்டதாக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23ம் தேதி காசிதர்மத்தை சேர்ந்த இசக்கி முத்து கந்துவட்டி கொடுமை யால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘லைன்ஸ் மீடியா’ எனற இணையதள பத்திரிக்கையில் ‘தமிழக வரலாற்றில் அவமானகரமான நாள்’ என்ற தலைப்பில் வந்த செய்திக்கு கார்ட்டூன் படம் வெளியிடப்பட்டது. அந்த கார்ட்டூன் படத்தில் குழந்தை தீயில் எரிந்து கொண்டிருப்பது போன்றும், அதனை முதல்வர், நெல்லை கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் நின்று வேடிக்கை பார்ப்பது போல படம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த கார்ட்டூன் படத்திற்கு கீழ் பாலா என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கார்ட்டூன் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், சென்னை மாங்காடு கோவூரைச் சேர்ந்த பாலா என்ற பாலகிருஷ்ணன் மீது அவதூறு செய்தி வெளியிடுதல், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக படத்தை வரைந்து வெளியிடுதல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை நெல்லை குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவரை வாகனம் மூலம் நெல்லை மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்திற்கு நேற்று அதிகாலை கொண்டு வந்தனர். காலை 10.30 மணிக்கு நெல்லை ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் ராம்தாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் 2 நபர் ஜாமின் உத்தரவாதம் பெற்றுக்கொண்டு போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் வழங்கினார். வழக்கை வரும் 9ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.

கோர்ட்டில் திடீர் பரபரப்பு:

நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை ஆஜர்படுத்தியபோது, அவருக்கு மாஜிஸ்திரேட் ஜாமின் வழங்கினார். ஜாமின் வழங்கிய பின், சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது. போலீசார் விசாரணை நடத்த வேண்டும். எங்களது கஸ்டடிக்கு அனுப்புங்கள் என இன்ஸ்பெக்டர்  தெரிவித்து, பாலாவின் கையை பிடித்து வெளியே இழுத்தார்.

இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டதால் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுவிட்டது. போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிடுகிறேன் என மாஜிஸ்திரேட் ராம்தாஸ் தெரிவித்தார். இதனால் இந்த பரபரப்பு சிறிது நேரத்தில் ஓய்ந்தது.

மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்:

கைதான கார்ட்டூனிஸ்ட் பாலாவை கோர்ட்டிற்கு போலீஸ் வேனில் கொண்டு வந்தபோது, திடீரென மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.