கேரள அருட்சகோதரி ராணி மரியாவிற்கு முக்திபேறு பட்டம் : இந்துாரில் போப் ஆண்டவரின் இந்திய தூதர்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:09


மார்த்தாண்டம்:

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பாரதத்தின் முதல் பெண் ரத்தசாட்சி அருட்சகோதரி ராணி மரியாவிற்கு முக்திபேறு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

   கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் அருகே புல்லுவழி கிராமத்தை சேர்ந்தவர் எலிஸ்வா. இவரது ஏழு குழந்தைகளில் 2-வது குழந்தையாக பிறந்தவர் ராணி மரியா. பள்ளி படிப்பு முடித்ததும் கான்வெண்டில் சேர்ந்து அருட்சகோதரியாக மாற வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் கான்வெண்டில் சேர்ந்து படிப்பை துவங்கினார். அருட்சகோதரி பட்டம் பெற்றபின் ஆசிரியையாக தனது பணியை தொடர்ந்தார். சமூக சேவையில் நாட்டம் கொண்ட இவர் பல்வேறு பகுதிகளில் சமூக பணிகளை ஆற்றி வந்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த சீரோமலபரர் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் உள்ள மறை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுப்பட்டார். குறிப்பாக நிலபிரபுக்களின் கீழ் பணிபுரியும் நிலமற்ற ஏழை மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும், அவை கிடைப்பதற்காகவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இதனால், ஆத்திரமடைந்த சமூக விரோத கும்பல் அருட்சகோதரி ராணி மரியாவை படுகொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த  1995ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த அருட்சகோதரி ராணி மரியாவை சமுந்தர்சிங் என்பவர் 50-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்கி படுகொலை செய்தார். இதில் கைது செய்யப்பட்ட சமுந்தர்சிங் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரக்ஷாபந்தன் தினத்தன்று ஜெயிலுக்கு சென்ற  ராணி மரியாவின் சகோதரி சமுந்தர்சிங்கின் கையில் ராக்கி கயிறு கட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த சமுந்தர்சிங் கேரளாவில் சென்று ராணி மரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை பலமுறை சந்தித்த சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில், அருட்சகோதரி ராணி மரியா பாரத கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் முதல் பெண் ரத்த சாட்சியாக போற்றப்பட்டு வந்தார். அவருக்கு புனிதர் நிலைக்கு முந்தைய நிலையான முக்திபேறுபெற்ற பட்டம் வழங்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் முடிவு செய்தார். அதனடிப்படையில், அருட் சகோதரி ராணி மரியாவிற்கு முக்திபேறு பெற்ற பட்டம் வழங்கும் நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது. போப் ஆண்டவரின் இந்திய தூதர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவரை முக்திபேறு பெற்றவர் என்ற அறிவிப்பை வெளியிட்டார். நிகழ்ச்சியில், கர்தினால்கள் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, பெசிலியோஸ்கிளிமீஸ் கதோலிக்காஸ் மற்றும் பிஷப், அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள், அருட்சகோதரி ராணிமரியாவின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் சமுந்தர்சிங் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. விழா நடந்ததை யொட்டி அருட்சகோதரி ராணி மரியா பிறந்த ஊரான கேரள மாநிலம் புல்லுவழி புனித தோமையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள், ஜெபமாலை ஊர்வலம் நடந்தது.

இந்தியாவில் இதுவரை புனித அல்போன்சம்மா, புனித சாவறா குரியக்கோஸ், புனித எவுபிராசியம்மா ஆகிய மூன்று புனிதர்கள் உள்ளனர். தற்போது புனிதர் நிலைக்கு முந்தைய நிலையான முக்திபேறு பெற்ற நிலைமைக்கு அருட்சகோதரி ராணி மரியா உயர்த்தப்பட்டுள்ளர். இதன்மூலம் உலகம் முழுவதும் அவரது பெயரில் ஆலயம் கட்டவும், பரிந்துரை ஜெபங்கள் செய்யவும் இயலும். இந்த நான்கு நபர்களும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் சிரோமலபார் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரதத்தின் முதல் ரத்த சாட்சியான குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை புனிதர் நிலைக்கு முந்தைய முக்திபேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.