குமரியில் தொடரும் பலத்த மழை: வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:08


திருவட்டார்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் பெரும்பான்மை குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

 குமரி மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனைகிடங்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, ஆறுகாணி, பத்துகாணி, குலசேகரம் மமணலோடை கோதையாறு சுருளக்கோடு உள்ளிட்ட  இடங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. இதன் காரணமாக பழையாறு, குழித்துறை ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆங்காங்கு உள்ள தடுப்பு  அணைகளிலும் தொடர் மழை காரணமாக கணிசமான அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 2500 குளங்கள் உள்ளன. இவற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பே 250 குளங்கள் முழுமையாக நிரம்பின. இந்நிலையில் தொடர் மழையால் மேலும் 600 குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன. 740 குளங்கள் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி குளங்களில் 25 சதவீதம் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் பால் வெட்டும் பணியும் முடங்கி உள்ளது.   கட்டுமான தொழில் உள்ளிட்ட அன்றாட தொழில்கள் பல முடங்கியுள்ளன.இதனால் தினக்கூலி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் பல்வேறு பகுதியில் ரோடுகள் உடைப்பு ஏற்படுத்தி போக்குவரத்து செல்லவும் இடையூறு ஏற்பட்ட வண்ணம் காணப்படுகிறது. இப்பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க முன்வரவேண்டியது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.