புத்தன் அணை திட்டத்தை கைவிடகோரி விவசாயிகள் நாளை ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2017 07:07

நாகர்கோவில்:

புத்தன் அணை குடிநீர் திட்டத்தை கைவிடகோரி  எதிர்ப்புக்குழு விவசாயிகள் சார்பில் நாகர்கோவிலில் நாளை  ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

புத்தன் அணை குடிநீர் திட்டம் மூலம் பேச்சிப்பாறை அணையிலிருந்து நாகர்கோவிலுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்துக்கு குமரி மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் குறித்து கலெக்டர் தலைமையில் ஏற்கனவே நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதுமட்டுமல்லாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புத்தன் அணை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு அத்துடன் நிற்காமல் புத்தன் அணை குடிநீர் திட்ட எதிர்ப்புக்குழு விவசாயிகள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தவும், புத்தன் அணை திட்டத்தை கைவிடகோரி கோர்ட்டில் வழக்குதொடரவும் முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக புத்தன் அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உலக்கை அருவி திட்டம், முக்கடல் அணையின் உயரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட மாற்று திட்டங்கள் மூலம் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்க கேட்டும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமை வகிக்கிறார். புலவர் செல்லப்பா, பத்மதாஸ், தாணுபிள்ளை, மருங்கூர் செல்லப்பா, விஜி, திரவியம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  குமரி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் புத்தன் அணை குடிநீர் திட்ட எதிர்ப்புக்குழு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.