துாத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 08:13

துாத்துக்குடி,:

துாத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டே முக்கால் மணி நேரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துாத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையில் இரண்டு மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சுமார் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். பொதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்கள் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். துாத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அதே நிலை தான் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு பணிகளுக்கு இந்த அலுவலகத்தில் அதிகமான பணம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., ராஜ்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் துாத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

முதலில் அலுவலகத்திற்கு வெ ளி ஆட்கள் வருவதை நிறுத்தினர். பின்னர் அத்தியாவசிய பணி தொலை தொடர்பை தவிர மற்ற இணைப்புகளை நிறுத்தினர். ஒவ்வொரு அறையாக சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஊழியர்கள், புரோக்கர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி அறையில் சோதனையிட்ட போது கணக்கில் வராத ஒரு  லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாயை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மதியம் ஒன்றரை மணிக்கு சோதனைக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலை 4.15 மணிக்கு சென்றனர். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் சோதனை நடந்தது. சோதனையில் சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இரண்டு புரோக்கர்களிடம் அதிரடி விசாரணையும் செய்யப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை துாத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே நாளில் இது போன்ற அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது கூடுதல் பரபரப்பை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.