குலசை தசரா விழாவில் திருடு போன 44 சவரன் நகைகள் 12 இருசக்கர வாகனம் மீட்பு

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 08:07துாத்துக்குடி,:

துாத்துக்குடி மாவட்டத்தில் திருடுபோன 41 சவரன் நகைகள், 12இருசக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் மீட்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., மகேந்திரன் தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்,பி அலுவலகத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

துாத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் மூலம் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு கூடுதல் ரோந்து பணி, வாகன தணிக்கை, பழைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை விசாரிக்கும் பணி, மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மூலம் கூடுதல் இரவு ரோந்துப்பணி, இரவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரியும் நபர்களை விசாரிப்பது மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை பற்றிய தகவல்களை சேகரித்தல் போன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான வாகன பதிவெண்களை இணையதள வசதியுடன் ஆய்வு செய்ததில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 12 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் கண்டறியப்பட்டு கோர்ட் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துாத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நிலுவையில் இருந்து வந்த இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளை கண்டறிய எனது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்குகளை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்த முருகன் (எ) குருகாட்டூர் முருகன் (38) மற்றும் எம். சவேரியார்புரத்தை சேர்ந்த சாமுவேல் மகன் அய்யனார் (24) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் மாவட்டத்தில் இருந்து வந்த 27 இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி 8 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.

குலசை முத்தாரம்மன் காயல் தசரா திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி முதல் 1.10.2017 வரை நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்கு வந்த பக்தர்களிடம் தங்க நகைகள் சுமார் 44 சவரன் திருடப்பட்டது. இது சம்பந்தமான புகாரில் குலசேகரப்பட்டணம், திருச்செந்துார் போலீஸ் ஸ்டேஷனில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போலீசாரின் தீவிர முயற்சியால் தஞ்சாவூரை சேர்ந்த சுகுணா (37) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் 44 சவரன் தங்க நகைகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு கோர்டின் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தாளமுத்துநகர் காவல் சரகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாத 4 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில் மிகவும் திறமையாக அருகில் இருந்த கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை இனம் கண்டு கைது செய்து வழிப்பறி செய்த ரூபாய் 27 ஆயிரம் பெறுமான பொருட்களை மீட்டுள்ளனர்.

நாலாட்டின்புதுார் போலீஸ் சரகத்தில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு குற்ற வழக்குகளில் அடையாளம் தெரியாத குற்றவாளிகளை மிகவும் திறமையாக செயல்பட்டு கண்டறிந்து அவர்களை கைது செய்து திருடப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து ௫ ஆயிரம் பெறுான எட்டு பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு எஸ்.பி தெரிவித்தார்.

இந்த வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருச்செந்துார் குற்றப்பிரிவு பிச்சையா, குலசை போலீஸ் ஸ்டேஷன் அஜிகுமார், தாளமுத்துநகர் போலீஸ் ஸ்டேஷன் வனிதா ராணி, தனிப்படை உதவி ஆய்வாளர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் எஸ்.பி மகேந்திரன் பாராட்டினார்.