தென்காசியில் பொதுமக்களை மிரட்டும் ‘மெகா’ கொசுக்கள்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:54


தென்காசி,:

தென்காசி நகர் பகுதிகளில் கூட்டம் கூட்டமாய் வீடு, கடைகளில் குடியேறும் கொசுக்களை வெளியேற்ற வழி தெரியமால் பொதுமக்கள் திணறி வருகின்றனர். வேகமாய் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்தும் வண்ணம் தினமும் பொதுமக்கள் மக்கள் சந்திக்கும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

இந்த சீதோஷ்ண நிலை காரணமாக தென்காசி நகராட்சி பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுத் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது கொசுக்கள் என கூறி வரும் நிலையில், பொதுமக்கள் கொசு என்றாலே ஒரு வித பயத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி நகர் பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளில் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக வீட்டில் உள்ள சுவர்கள் மற்றும் பொருட்கள் வைத்திருக்கும் இடங்கள், கழிவறைகள் புகுந்து வருவதாக தெரிவித்து வருகின்றனர். இந்த கொசுக்கள் பார்ப்பதற்கு உருவத்தில் பெரிய அளவில் இருப்பதுடன் தேனீக்கள் போல கூட்டமாக வருகின்றன.

இதுகுறித்து தென்காசி நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. கொசுக்கள் அனைத்தையும் டப்பாவில் பிடித்து சென்றதுடன், அதனை சோதனைக்காக எடுத்து சென்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாக ஏடிஎஸ் கொசுக்கள் விளங்குவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில்  டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை மேற்கொள்வரின் எண்ணிக்கை பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமும் மக்கள் அதிகம் சந்திக்கும் இடங்களான பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி நகர் பகுதிகளுக்குள் முக்கியமாக செல்லக்கூடிய ஆறு மற்றும் குளங்களில் குப்பைகளை கொட்டதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்ஆகிய இடங்களில் கட்டணம் மற்றும் இலவச கழிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும். பொது இடங்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வசிக்கும் இடங்களை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.