அபுதாபி சிறையில் அடைக்கப்பட்ட குமரி மீனவர்கள் விடுதலை

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:25


நாகர்கோவில்:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அபுதாபி சிறையில் அடைக்கப்பட்ட நான்கு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கடியப்பட்டணம் ஏசுதாசன் மகன்கள் ஜெர்னால்டு ரீகன், கரோல் ஜெகின் அந்தோணி பிச்சை மகன் ஜான் பிரபாகர், ஜார்ஜ் மகன் ரீகன் ஜியோ கிளார்வின், மிடாலம் பகுதியைச் சார்ந்த சீமோன் மகன் ஜோஸ் ஸ்டாலின் ஆகியோர் கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். கஸ்வானி என்ற படகில் கர்த்தார் வாஹ்ரா பகுதிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டபோது அவர்கள் கடல் எல்லையை தாண்டியதாக கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அபுதாபி கடற்பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 5 பேரையும் விடுதலை செய்ய வேண்டி மத்திய நிதி மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பல கட்ட முயற்சி எடுத்திருக்கிறார். அதன் ஒருபகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதன் அடிப்படையில் கரோல் ஜெகின், ரீகன், ஜான்பிரபாகர் மற்றும் ஜோஸ் ஸ்டாலின் ஆகிய நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இந்தியா திரும்ப விமான டிக்கெட் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செய்துள்ளார்கள். இவர்கள் நான்கு பேரும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புகிறார்கள். இதில் ஜெர்னால்டு ரீகனை விடுதலை செய்ய இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவரும் விரைவில் தாயகம் திரும்புவதாக அபுதாபிக்கான இந்திய தூதரக அதிகாரி தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நாகர்கோவிலில் உள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் முகாம் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.