குழப்பமான அரசியல் சூழ்நிலைக்கு கவர்னர் தீர்வு காண வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2017 07:47


திருச்செந்துார், :

தமிழகத்தில் உள்ள குழப்பமான அரசியல் சூழ்நிலைகளுக்கு கவர்னர் தீர்வு காண வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுசெயலாளரும் கடையநல்லூர் எம்.எல்.ஏ.,வுமான முஹம்மது அபுபக்கர் கூறினார்.

காயல்பட்டணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் பா.ஜ., பொறுப்பேற்ற பிறகு சிறுப்பான்மை சமுதாய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழி, இனம், கலாச்சாரங்களை கொண்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். சித்தார்த்தங்களை அடிப்படையாக கொண்ட ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிது. இதற்காக மற்ற கட்சிகளை தடை செய்வது, உரிமைகளை பறிப்பது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, ஹஜ் பயணிகளுக்குமானியத்தை நிறுத்துவது, சுற்றுலா ஸ்தலங்களின் பெயர் பட்டியலிருந்து தாஜ்மஹால் பெயரை அகற்றியது, கல்வி கொள்கைகளை மாற்றியது, இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சிறுப்பான்மை மக்களுக்கு எதிராக பா.ஜ., அரசு செயல்படுகிறது.

 தமிழக அரசும் இதை கண்டு கொள்ளாமல் மத்திய அரசை ஆதரித்து வருகிறது. எனவே சிறுப்பான்மை மக்களின் வாழ்வரிமை பாதுகாக்க தமிழகத்தில் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு மாவட்டங்கள் தோறும் நடத்தப்பட இருக்கிறது. துாத்துக்குடி மாவட்டத்தில் இம்மாநாடு வரும் 14ம் தேதி காயல்பட்டிணத்தில் நடக்கிறது. இதில் மதசார்ப்பற்ற தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதனை தொடர்ந்து வரும் 28ம் தேதி கடலூரிலும், டிசம்பர் 23ம் தேதி திருச்சியிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி திருநெல்வேலியிலும் இம்மாநாடு நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இம்மாநாடுகள் நடத்தி முடிக்கப்படும். வரும் 2019ம் தேதி பாராளுமன்ற தேர்தலில் காங். தலைமையிலான அரசு அமையவும், தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான அரசு அமையவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணியாற்றி வருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நுாற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த பாதிப்பு அதிகரித்துவிட்டது. இதை அரசே ஒப்புகொண்டுள்ளது.

அ.தி.மு.க., கட்சி குழப்பத்தை மட்டும் பார்க்காமல் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள குழப்பமான சூழ்நிலையில் புதிததாக பொறுப்பேற்ற கவர்னர் இதற்குத் தீர்வு காண வேண்டும். தமிழக அரசு 110 விதின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் அது தொடர்பாக அரசு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் எதிர்கட்சியில் ஓரணியில் நின்று வலியுறுத்தி வருகிறோம்.  மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்தை செயல் இழக்க செய்துவிட்டனர். இவ்விஷயத்தில் தமிழக கவர்னர் எந்தவித நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் பராபட்சம்யற்ற முறையில் ஜனநாயகத்தை தழைக்க செய்ய வேண்டும்.

மத்திய அரசு நதிநீர் பிரச்சனை, காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் முஹம்மது ஹசன், மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி, துாத்துக்குடி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் இஸ்மாயில் உட்பட பலர் உடனிருந்தனர்.