விளவங்கோடு துணை தாசில்தாருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் :மாநில தகவல் ஆணையம் அதிரடி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:37

மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் அருகே தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்த மனுதாரருக்கு குறித்த காலத்தில் தகவல் தராத விளவங்கோடு துணை தாசில்தாருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தை மாநில தகவல் ஆணையம் விதித்துள்ளது.

   மார்த்தாண்டம் அருகே இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் அகமது மகன் செய்யது அலி (45). இவர் வெள்ளாங்கோடு வில்லேஜ் ரீசர்வே எண் 551–5, 6 ஆகிய எண்களில் கொண்ட சொத்துக்களின் சிட்டா நகல் உள்ளிட்ட 9 விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலக பொது தகவல் அலுவலருக்கு கடந்த 2014ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அந்த மனுவை விளவங்கோடு தாலுகா ஆபீசிற்கு அனுப்பி  பதில் அளிக்குமாறு கலெக்டர் ஆபீஸ் அதிகாரிகள் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. ஆனால், விளவங்கோடு தாலுகா ஆபீசிலிருந்து மனுதாரருக்கு உரிய விவரங்கள் வழங்கப்படாததால் மனுதாரர் இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை மாவட்ட அதிகாரிக்கு அனுப்பி உள்ளார். மறுபடியும் பதில் கிடைக்கப்பெறாததால் மனுதாரர் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை மாநில தகவல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த மனு தொடர்பாக 30 தினங்களுக்குள் தகவல் பெறும் உரிமை சட்டபிரிவுகளுக்கு உட்பட்டு மனுதாரருக்கு தகவல் வழங்கி ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப குமரி மாவட்ட பொது தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்தரவிட்டது. அதற்கு பின் விளவங்கோடு தாலுகா அலுவலக பொது தகவல் அலுவலர் சில தகவல்களை மனுதாரருக்கு வழங்கியுள்ளார். ஆனால், தனக்கு உரிய தகவல்களை வழங்க வில்லை என தெரிவித்து மனுதாரர் கடந்த 2015-ம் ஆண்டு புகார் மனுவை தகவல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக தகவல் ஆணையம் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தியது. விசாரணையில் உரிய தகவல்களை பதிவஞ்சல் மூலம் அனுப்பி அதை மனுதாரர் பெற்று கொண்டதாக தாலுகா அலுவலக பொதுதகவல் அலுவலர் தெரிவித்தார். ஆனால், விண்ணப்பித்து சுமார் இரண்டு ஆண்டுகள் காலதாமதமாக தகவல் தனக்கு வழங்கபட்டுள்ளதாக மனுதாரர் விசாரணையில் தெரிவித்தார். இதற்காக ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் இழப்பிற்காக பொது தகவல் அலுவலரிடம் இருந்து இழப்பீடு தொகை பெற்று தருமாறு அவர் தகவல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் முறையான தகவல்களை வழங்காததால் விளவங்கோடு தாலுகா துணை தாசில்தாரின் ஊதியத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து மனுதாரருக்கு வங்கி வரைவோலையாக கொடுத்து அதற்கான ஒப்புகை சீட்டை 30 தினங்களுக்குள் தகவல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு முறையான தகவல்களை, குறித்த காலத்திற்குள் கொடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.