மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017 11:06


திருச்செந்துார்:

திருச்செந்துாரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை,  தினகரன் ஆதரவாளரான  திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ் திடீரென சந்தித்து பேசினார். ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்’, என கருணாஸ்  தெரிவித்தார்.

இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏ. வான சண்முகநாதனும் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார்.

 மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிதித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் முறையாக திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார். விருந்தினர் மாளிகையில்  அவருக்கு பா.ஜ. வினர் வரவேற்பு அளித்தனர்.

 பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று  சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் கட்சி பிரமுகர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் நாகர்கோவில் செல்வதற்காக விருந்தினர் மாளிகையிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணன் காரில் புறப்பட்டார். அப்போது திருச்செந்துாரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவரும்,  தினகரன் ஆதரவு திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் காரில் அங்கு வந்தார்.  அவரைப் பார்த்ததும் பொன் ராதா கிருஷ்ணன் காரில் இருந்து இறங்கி வந்தார்.

. இருவரும் தனியாகச் சென்று சுமார் 15 நிமிடங்கள் பேசினர். இருவரது சந்திப்பு இரு தரப்பு ஆதரவாளர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து காரில்  புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பு குறித்து கருணாஸ் எம்.எல்.ஏ., கூறுகையில், திருச்செந்துாரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பின்னர் கோயிலுக்கு செல்வதற்காக வந்த போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்பாராதவிதமாக சந்திக்க நேரிட்டது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்.முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளேன். இந்த சந்திப்பின் போது, அதை நினைவுபடுத்தினேன்.  வேறு விஷயம் எதுவும் பேசவில்லை என்றார்.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகநாதன் குடும்பத்துடன் சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய நிதி துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக திருச்செந்துார் வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனை பா.ஜ.  மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட பொதுசெயலாளர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகுமார், மாவட்ட மகளிரணி தலைவி நெல்லையம்மாள் ஆகியோர் வரவேற்றனர்.