சிவன் கும்பாபிஷேக விழாவில் 12 பெண்களிடம் 74 பவுன் நகைகள் கொள்ளை!

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2017 09:01

துாத்துக்குடி:

துாத்துக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேக விழாவினை காண வந்த 12 பெண்களிடம் சுமார் 74 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள. கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். திட்டமிட்டு நடந்த இந்த சம்பவத்தால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

துாத்துக்குடியில் புகழ்பெற்ற சிவன்கோயிலில் நேற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.கடந்த 3ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியதில் இருந்தே கோயில் வளாகத்தில் கூட்டம் அலைமோத துவங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பணி உபயதாரர் கமிட்டி சார்பில் கும்பாபிஷேகம் அன்று சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்திருந்தனர். அதைப்போல் துாத்துக்குடியில் நேற்று திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வடக்கு சம்பந்தமூர்த்தி, தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு, சிவன்கோயில் தெரு, வடக்கு மற்றும் மேற்கு, கிழக்கு ரதவீதிகளில் நடந்துகூட செல்லமுடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் திரண்டுநின்றது.

கூட்டத்தை பயன்படுத்தி நகைகள் கொள்ளை:

சிவன்கோயிலை சுற்றியுள்ள தெருக்கள் அனைத்தும் குறுகிய தெருக்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்தது.இந்த கூட்டத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 பெண்களிடம் சுமார் 70 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கும்பாபிஷேகத்தை காணவேண்டும் என்ற ஆர்வத்திலும், கும்பநீரை தலையில் தெளிக்கவேண்டும் என்ற ஆசையிலும் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் பக்தர்கள் கூட்டம் நெருக்கிதள்ளியதால் கோயில் முன்பு சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்தாக்கம் மூன்று தெருக்களிலும்இருந்தது.

கூட்டத்தோடு கூட்டமாக புகுந்த திருடர்கள்:

ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்டத்திற்குள் பக்தர்கள் போர்வையில் நுழைந்த திருடர்கள் 12 பெண்களிடம் சுமார் 74 பவுன்நகைளை கொள்ளைடியத்து சென்றுள்ளனர். கூட்டத்தில் இருந்து வெளியே வந்த பிறகுதான் தங்களுடைய செயின் பறிபோய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனடியாக அருகில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவதி்துள்ளனர். இதுவரை போலீசாரிடம் 12 பெண்கள்  புகார் செய்திருக்கின்றனர். நகைகளை பறிகொடுத்துவிட்டு போலீசில் புகார்கொடுக்காமல் சென்றவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை செய்ய மறந்த போலீசார்:

துாத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவின் போது ஸ்பீக்கர் கட்டி நிமிடத்திற்கு நிமிடம் தங்களுடைய உடமைகளையும்,நகைகளையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், என்று அறிவிப்பு செய்துகொண்டே இருந்தே இருந்தனர். இதைப்போல் கோயில் வளாகத்தை சுற்றிலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கூட்டத்தை கண்காணித்துக்கொண்டிருந்தனர்.இரண்டு இடங்களில் கண்காணிப்பு டவர் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கவனித்துக்கொண்டிருந்தனர்.மேலும் திருடர்கள் பயப்படும்படியாக கோயிலை சுற்றியுள்ள கேமராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமானவர்கள் கண்காணிக்கப்படுகிறார் என்று அறிவிப்பு செய்ததால் பனிமயமாதா கொடியேற்று விழாவில் இந்தாண்டு மிகப்பெரிய அளவில் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை.

இதைப்போல் சிவன்கோயில் கும்பாபிஷேக விழாவின் போது மைக் மூலம் பொதுமக்களை உஷார் படுத்தியிருக்காலம். திருடர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை கொடுத்திருக்கலாம். கண்காணிப்பு கேமரா மற்றும் வாட்சிங் டவர் அமைக்கும் அளவுக்கு சிவன் கோயில் பகுதியில் இடமில்லையென்றாலும் கூட்டநெரிசலை கட்டுப்படுத்தியிருக்கலாம். போலீசாரின் கவனமெல்லாம் கோயில் மேல்தளத்திற்கு பக்தர்கள் அதிகளவில் சென்றுவிடக்கூடாது என்பதில்தான் இருந்ததே தவிர கீழ்பகுதியில் பக்தர்களை பாதுகாப்பதில் கோட்டைவிட்டுவிட்டனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.