பிரதமர் பணியை மோடி கவனிக்கவில்லை: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டென்ஷன்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:05


துாத்துக்குடி:

மோடி பிரதமர் பணியை கவனிக்காமல் அதிமுகவில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார் என்று துாத்துக்குடியில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புகார் கூறினார்.

நெல்லை மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று துாத்துக்குடிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மாவட்டம் சென்றார். துாத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரசார் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.டி. அலெக்சாண்டர், தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவர் தங்கராஜ், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருப்பதிராஜா, வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சால்வை அணிவித்து வரவேற்றனர்.

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விமான நிலையத்திற்கு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களை அங்கிருந்து செக்யூருட்டிகள் அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரசார் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானம் வரும் நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தில் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பிய காங்கிரசார் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில், மோடி பிரதமர் போல் செயல்படவில்லை. எந்த கட்சியை உடைக்கலாம். எந்த கட்சியில் இருந்து திருட்டு தனமாக ஆட்களை இழுக்கலாம் என்று தான் சிந்தித்து கொண்டிருக்கிறார். அவருக்கு மக்களை பற்றி சுத்தமாக சிந்திக்கவில்லை.

நாட்டில் ஜி.எஸ்.டி பிரச்னை, விவசாய பிரச்னை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளை மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. ஆனால் அதில் சிறிதளவும் கவனம் செலுத்தாத மோடி அதிமுகவை இரண்டு, மூன்று அணிகளாக பிரித்து வைத்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். வரும் பார்லிமெண்ட் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதால் அதிமுகவில் குதிரை சவாரி செய்வதற்காக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைப்பு வேலையை மோடி செய்து கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டில்லிக்கு செல்கின்றனர். பிரதமரை சந்திக்கின்றனர். மக்கள் நலனுக்காக அவர்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. அதிமுக உட்கட்சி விஷயமாக கட்டப்பஞ்சாயத்து செய்து விட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்த அரசின் செயல்பாடு மிக மோசமான நிலையில் உள்ளது.

தமிழகத்தில் ௫ ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆஸ்பத்திரியில் இறந்துள்ளனர். இதனை தடுக்க அரசு துளி அளவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது.

திரும்ப, திரும்ப பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை சந்திக்க நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாய சங்கத்தினரை மட்டும் சந்திக்க இன்னும் நேரம் கிடைக்கவில்.லை. மோடியின் இந்த செயல் ஒட்டு மொத்த தமிழக விவசாயிகளை அவமதிக்க கூடிய செயலாகும்.

அதிமுகவில் பலமாக இருக்க கூடிய கோஷ்டியை தங்கள் பக்கம் வைத்து கொண்டு அதன் மூலம் பலன் பெறலாமா என்று மோடி திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார். மோடியின் எந்த திட்டமும் இனி நிறைவேறாது. இனிமேல் பா.ஜ வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்றார்.