. திருச்செந்துார் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:03


திருச்செந்துார்:

 திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

            முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதும், சிறந்த குரு பரிகாரஸ்தலமுமான திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பல முக்கியத் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதில் ஆவணி திருவிழாவும் முக்கியமானதாகும். இவ்வாண்டு ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வௌ்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் சண்முகசுந்தர் பட்டர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சிபுரம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) பரஞ்ஜோதி, உதவி ஆணையர் அருணாச்சலம், டிஎஸ்பி தீபு, உள்துறை கண்காணிப்பாளர்கள், ராஜமோகன், பத்மநாபபிள்ளை, உள்துறை மேலாளர் அய்யாப்பிள்ளை,

ஏரல் சோ்மன் கோயில் அருணாச்சலம், திருவாவடுதுறை ஆதீனம் தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன், கண்காணிப்பாளர் சோனாச்சலம், துாத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் பாரதி, திருச்செந்துார் அர்பன் கூட்டுறவு வங்கி இளங்கோ, கோவில் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜாராணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

            கொடியேற்றத்தை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரதேவருடன் தந்த பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளிலும் உலா வந்து கோயிலை சேர்ந்தார். இன்று 2ம் திருநாளை முன்னிட்டு காலையும், இரவிலும் சுவாமி குமரவிடங்கப்பெருமாள் சிங்ககேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் காலையில் சிறிய பல்லக்கிலும், இரவில் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளுகின்றனர்.