பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை நிறைவு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 07:46

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 12 நாட்கள் நடந்த ஆடி களப பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது.

       இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கியபூஜைகளில் ஒன்றான ஆடி களப பூஜை கடந்த 31ம் தேதி தொடங்கியது.  அம்பாள் அவதரித்த ஆடி பூரம் நட்சத்திரம் முதல் தொடர்ந்து 12 நாட்களும் அம்பாளை குளிர்விப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம், நிர்மால்ய பூஜை , அபிஷேகம், தீபாராதனை, ஸ்ரீபலி, நிவேத்ய பூஜை நடந்தது. களபபூஜையை முன்னிட்டு காலை 10 மணிக்கு எண்ணெய், தேன், பால், பன்னீர், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம், களபம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஜவ்வாது, அக்தர், புனுகு, பச்சைகற்பூரம், கோரேசனை, போன்ற வாசனை திரவியங்களை ஒன்றாக  கலந்து  சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் தந்திரி சங்கரநாராயணரூ அம்பாளுக்கு அபிஷேகம் செய்தார்.                         தொடர்ந்து அம்மனுக்கு தங்கஆபரணங்கள், வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்கஅங்கி கவசம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி, மதியம் அன்னதானம் நடந்தது. மாலை  நடைதிறக்கப்பட்டு  சாயரட்சை தீபாராதனை, இரவு  அம்மனுக்கு ரோஜா, தாமரை, துளசி, பிச்சி போன்ற பல்வேறு மலர்களால் புஷ்பாபிஷேகம்,  பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி கோயில் வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாளபூஜை, ஏகாந்த தீபாராதனை நடந்தது.  கடந்த மாதம் 31-ம் தேதி  தொடங்கி நேற்று ( 11-ம் தேதி) வரை நடந்த ஆடி களப பூஜையின் 12ம் நாளில்   உதயஅஸ்தமன பூஜை, அதிவாசஹோமத்துடன் ஆடிகளப பூஜை நிறைவடைந்தது.