முகத்தில் கல்லை போட்டு முன்னாள் பஞ்.,தலைவர் படுகொலை

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 09:06

கயத்தாறு:

கயத்தாறு அருகே காதல் திருமணத்திற்கு தடையாக இருந்த முன்னாள் பஞ்.,தலைவர் முகத்தில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்தவர் பூலையா மகன் பாண்டி(53). இவர் அவ்வூரில் பஞ்., தலைவராக இருந்துள்ளார். தற்போது ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலிலும் பஞ்., தலைவர் வேட்பாளராக போட்டியிட்டார் என தெரிகிறது. இந்நிலையில் நேற்று ஊர் கோயில் அருகே நடந்துசென்றார். அவரை மர்மநபர் திடீரென்று பின்னாலிருந்து தள்ளியுள்ளார். அதில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்த அவரை அந்நபர் அருகில் கிடந்த பாறங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுவிட்டு தப்பியுள்ளார். அது மூக்கில் மீது விழுந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தகொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த காளிராஜ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடிவருகின்றனர். காளிராஜ் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அவரை திருமணம் செய்வதற்கு பாண்டி தடையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே ஆத்திரம் அடைந்த காளிராஜ் அவர் மீது கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்று போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் அவரை கைது செய்த பிறகே கொலைக்கான உண்மை காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.