குமரியில் அக்டோபர் 16ல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 08:16

நாகர்கோவில்,:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்க உள்ள முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பணிகள் குறித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்க இருப்பதை முன்னிட்டு அதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆ.ோசனைக்கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசுகையில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 16ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் பல்வேறு துறைகளின் வாயிலாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கிறார். மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகிய போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி அளவிலும், கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் கல்லூரி அளவிலும் இந்த போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களின் பெயர் பட்டியலும், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அலுவலர் மாராத்தான் போன்ற போட்டிகள் நடத்தி வெற்றிப் பெற்றவர்களின் விவரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கு அளிப்பதோடு அதை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கூடுதல் கலெக்டர்,  மாவட்ட வன அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் இணைந்து துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி), மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோர் சுவரொட்டிகள்,  விளம்பர பதாதைகள் உள்ளிட்ட விளம்பர தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வாகன அணி வகுப்பினை நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்த வேண்டும். அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகள் பட்டியல் விவரத்துடன் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் டி.ஆர்.ஓ. இளங்கோ, கூடுதல் கலெக்டர் ராஹுல்நாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதா பானு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.