சென்னை பாணியில் நாகரில் நகை பறிப்பு:அதிர்ச்சியில் ‘உண்மையான’ போலீஸ்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 08:15

நாகர்கோவில்,:

சென்னை பாணியில் நாகர்கோவிலில் நகை பறிப்பு சம்பவம் நடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் தெருக்களில் நடந்து செல்லும் பெண்களிடம் டிப் டாப் ஆசாமிகள் தங்களை போலீஸ் என அறிமுக படுத்திவிட்டு, பக்கத்து தெருவில் கலவரம் நடக்கிறது, அதனால் உங்கள் நகைகளை பாதுகாப்பாக நாங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம் என கூறுவார்கள். அதை நம்பி பெண்கள் நகைகளை கழற்றி கொடுப்பார்கள். அந்த ஆசாமிகளும் பேப்பரில் கல் உள்ளிட்ட பொருட்களை வைத்து கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு சென்று பார்க்கும்போதுதான் நகை நூதன முறையில் திருடு போன விஷயம் தெரியவரும். அதன்பிறகு பதறியபடி உண்மையான போலீசை தேடி போவார்கள். இதுபோன்ற நூதன நகைபறிப்பு சம்பவம் நாகர்கோவிலில் நேற்று நடந்துள்ளது.

நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டை சேர்ந்த நெல்சன் மனைவி ஜெரால்டின் (73). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள சர்ச்சிற்கு வழிபாடு செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த இரண்டுபேர் ஜெரால்டினிடம் சென்று தங்களை போலீஸ் என அறிமுகம் செய்தனர். பின்னர், நீங்கள் தனியாக செல்லும்போது நகையை கழுத்தில் அணிந்து சென்றால் பாதுகாப்பு இல்லை. பக்கத்தில் தான் இன்ஸ்பெக்டர் நிற்கிறார், நீங்கள் இப்படி சென்றால் அவர் எங்களை திட்டுவார். நகையை கழற்றி பர்சில் வைத்து கொண்டு செல்லுங்கள் என கூறியிருக்கிறார்கள். இதை நம்பிய ஜெரால்டின் அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினை கழற்றியிருக்கிறார். அப்போது சீக்கிரம் கழற்றுங்கள் என்றபடி அந்த இருவரும் நகையை கழற்ற உதவுவது போன்று நடித்து, அவரது கர்ச்சிப்பை வாங்கி அதில் நகையை வைப்பதுபோல் பாசாங்கு செய்திருக்கிறார்கள். பின்னர் வெறும் கர்ச்சிப்பை மடித்து பர்சுக்குள் வைத்து பர்சை மூடி அவர் கையில் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். இதை அறியாத ஜெரால்டின் சர்ச்சிற்கு சென்று பர்சை திறந்து பார்த்திருக்கிறார். அதில் கர்ச்சிப் மட்டும் இருந்தது, நகை இல்லை. நகை நூதன முறையில் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஜெரால்டின் வடசேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பாணியில் நாகர்கோவிலில் பெண்களிடம் நகை திருடப்பட்ட சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.