ஆஸி.,யிடம் இங்கிலாந்து ‘சரண்டர்’

பதிவு செய்த நாள் : 25 ஜூன் 2019

லார்ட்ஸ்


உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸி., தனது 6வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த முறை உள்ளூர் அணியான இங்கிலாந்தை 64  ரன்னில் வீழ்த்தியது. கேப்டன் ஆரோன் பின்ச் சதம் அடித்தார். பெஹ்ரன்டர்ப் 5, ஸ்டார்க் 4 விக்கெட் சாய்த்தனர்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த 32வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்  ஆஸ்திரேலியாவை எதிர்த்து இங்கிலாந்து மோதியது. இங்கிலாந்துக்கு இப்போட்டி முக்கியம் வாய்ந்ததாக மைந்தது. அதாவது வெற்றி முக்கியம் என் இருந்தது. பலத்த  எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பீல்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில்    ஜாம்பா, கூல்டர் நைல் நீக்கப்பட்டு நாதன் லியான், பெஹ்ரன்டர்ப் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. துவக்கத்தில் வோக்ஸ் வேகத்தில் வார்னர், பின்ச் திணறினர். இருவருக்கும்  தலா ஒரு கேட்சை முறையே ஜோ ரூட், வின்ஸ் தவறவிட்டனர். இதைப் பயன்படுத்தி இருவரும் அதிரடியில் இறங்கினர். 17.5 ஓவரில் ஆஸி., 100 ரன்கள் எடுத்த    போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச் 61 பந்தில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து வார்னர் தனது 20வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 52 பந்தில் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் (22.4 ஓவர்) சேர்த்த போது, மொயீன் அலி சுழலில் வார்னர் 53 ரன் (61 பந்து, 6 பவுண்டரி) சிக்கினார். பின் ஆரோன் பின்ச்சுடன் கவாஜா இணைந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பின்ச் ஒருநாள் போட்டியில் தனது 15வது சதத்தை பதிவு செய்ய  அரங்கமே அதிர்ந்தது. இந்த தொடரில் இவர் பதிவு செய்யும் இரண்டாவது சதம் இதுவாகும். பின்ச் 100 ரன் (116 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆர்ச்சர்  வேகத்தில் சரிந்தார். கவாஜா (23), ஸ்டீவ் ஸ்மித் (38), மேக்ஸ்வெல் (12), ஸ்டாய்னிஸ் (8), கம்மிவ்ஸ் (1) சொதப்பினர். கடைசி கட்டத்தில் அலெக்ஸ் கிரே (38),   ஸ்டார்க் (4) அவுட்டாகாமல் கைகொடுக்க ஆஸி., அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. கடைசி கட்ட ஓவர்களை இங்கிலாந்து பவுலர்கள்  சிறப்பாக வீசினர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. பெஹ்ரன்டர்ப் வேகத்தில் வின்ஸ், ‘டக்-அவுட்’ ஆனார். 2  பவுண்டரியுடன் கணக்கை துவக்கிய ஜோ ரூட் (8)  ஸ்டார்க் பந்தில் வெளியேற இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் டுகள் சரிய பேர்ஸ்டோவுடன் மார்கன் இணைந்தார். தொடர்ந்து அசத்திய ஸடார்க் இம்முறை மார்கன் (4) விக்கெட்டை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். முக்கிய  கட்டத்தில் பேர்ஸடோவ் (27), பட்லர் (25) ஆட்டமிழந்தனர். அதே நேரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ் 75 பந்தில் அரைசதம் அடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் 89 ரன் (115 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டனார்.

மொயீன் அலி (6), வோக்ஸ் (26), ஜோப்ரா ஆர்ச்சர் (1) நடையை கட்டினர். கடைசியாக ஸ்டார்க் பந்தில் அடில் ரஷித் (25) வெளியேற இங்கிலாந்து அணி 44.4  ஓவரில் 221 ரன்னுக்கு ஆட்டமிழந்து 64 ரன்னில் படுதோல்வி அடைந்தது. மார்க் உட் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில், அபாரமாக பந்து வீசிய  பெஹ்ரன்டர்ப் 5 (10-0-44-5), விக்கெட் வீழ்த்தினார். ஸ்டார்க் 4, ஸ்டாய்னிஸ் 1, விக்கெட் சாய்த்தனர். சதம் அடித்த ஆரோன் பின்ச் ஆட்டனாயகனாக தேர்வு  செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸி., இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என மொத்தம் 12 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.  4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் (இந்தியா,  நியூசிலாந்து) உள்ளன. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.