வங்கத்திடமும் வீழ்ந்தது ஆப்கன்

பதிவு செய்த நாள் : 24 ஜூன் 2019

சவுத்தாம்டன்


உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தனது 7வது தோல்வியை சந்தித்தது. இந்த முறை 62 ரன்னில் வங்கதேசத்திம் வீழ்ந்தது. சாகிப் அல் ஹசன் (51 ரன், 5 விக்கெட்) அசத்தினார்.

ஐ.சி.சி., நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. சவுத்தாம்டனில் இன்று நடந்த 31வது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற ஆப்கன் கேப்டன் குல்புதின் முதலில் ‘பீல்டிங்கை’ தேர்வு செய்தார்.

வங்கதேச அணிக்கு இம்முறை தமீம் இக்பாலுடன் லின்டன் தாஸ் துவக்கம் தந்தார். முஜீப் உர் ரஹ்மான் ‘சுழலில்’ லின்டன் தாஸ் (16) சிக்கினார். பொறுப்புடன் விளையாடிய தமீம் இக்பால் (36) முகமது நபி பந்தில் கிளீன் போல்டானார். பின் சாகிப் அல் ஹசனுடன் முஷ்பிகுர் ரஹிம் இணைந்தார். அனுபவ வீரர்களான இவர்கள் ஆப்கன் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு ரன் எடுத்து வந்தனர். 21வது ஓவரில் வங்கதேசம் 100 ரன் கடந்தது. சிறப்பான ஆட்டத்தை    வெளிப்படுத்திய சாகிப் அல் ஹசன் 66 பந்தில் அரைசதம் அடித்தார். அதே நேரம் அதிரடியாக விளையாடிய முஷ்பிகுர் 56 பந்தில் அரைசதம் விளாச சரிவிலிருந்து வங்கதேசம் மீண்டது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த நிலையில், சாகிப் அல் ஹசன் (51) ஆட்டமிழந்தார். சவுமியா சர்கார் (3) சொதப்பினார். மகமதுல்லா (27) ஓரளவு கைகொடுத்தார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தவ்லத் ஜத்ரான் பந்தில் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழந்தார். இவர் 83 ரன் (87 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். குல்புதின் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மொசாதக் ஹொசைன் (35) வெளியேற வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. முகமது சைபுதின் (2) அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கன் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3, குல்புதின் 2 விக்கெட் வீழ்த்தினர். நட்சத்திர பவுலர் ரஷித்கான் 10 ஓவரில் 52 ரன் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆப்கன் அணிக்கு ரஹமத் ஷா (24), ஹஷ்மதுல்லா ஷகிதி (11) ஏமாற்றினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சாகிப் அல் ஹசன் பந்தில் குல்புதின் (47) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதே ஓவரில் முகமது நபி ‘டக்-அவுட்’ ஆக ஆட்டம் வங்கதேசம் வசம் சென்றது. இதை உறுதி செய்யும் வகையில் முன்னாள் கேப்டன் அஸ்கார் ஆப்கன் (20) வெளியேறினார். ஆப்கன் அணி 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து திணறியது. இந்த நிலையில், விக்கெட்கீப்பர் இக்ராம் அலிகில் (11) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். நஜிபுல்லா ஜத்ரான் (23), ரஷித்கான் (2), தவ்லத் ஃத்ரான் (0) சொதப்பினர். கடைசியாக முகமது சைபுதின் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் ‘டக்-அவுட்’ ஆக ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 200 ரன்னுக்கு ஆட்டமிழந்து 7வது தோல்வியை சந்தித்தது. சமியுல்லா ஷின்வாரி (49) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் தரப்பில் அபாராமக பந்து வீசிய சாகில் அல் ஹசன் 5 விக்கெட் (10-1-29-5) வீழ்த்தினார். முஸ்தபிஜுர் ரஹ்மான் 2 விக்கெட் சாய்த்தார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய சாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி , ஒரு ஆட்டம் ரத்து என மொத்தம் 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. 7 ஆட்டத்திலும் தோற்ற ஆப்கன் முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.