கடைசி ஓவரில் ஷமி ‘ஹாட்ரிக்’ * ஆப்கனுக்கு இந்தியா ‘ஆப்பு’

பதிவு செய்த நாள் : 22 ஜூன் 2019

சவுத்தாம்டன்


உலக கோப்பை தொடரில் இந்தியா தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது. கடைசி ஓவரில் ஆப்கன் வெற்றிக்கு 16 ரன் தேவை என்ற நிலையில், முகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதையடுத்து 11 ரன்னில் இந்தியா ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் கேப்டன் கோஹ்லி, கேதர் ஜாதவ் இருவரும் அரைசதமடித்தனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில், உலகின் ‘டாப்-10’ அணிகள்  மோதுகின்றன. இந்திய அணி, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது. நியூசிலாந்து போட்டி மழையால் ரத்தானது. இதுவரை களமிறங்கிய 4 போட்டியில் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. 6 நாள் ஓய்விற்கு பின்பு ஐந்தாவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்டது. ஆப்கன் அணி தான் விளையாடிய 5 ஆட்டத்திலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் இருந்தது.

நேற்றைய போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, முதலில் ‘பேட்டிங்’கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.  காயமடைந்த புவனேஷ்வர் குமார் இடத்தில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ராகுல் இருவரும் மோசமான துவக்கம் தந்தனர்.  முஜீப் உர் ரஹ்மான் ‘சுழலில்’ ரோகித் சர்மா (1) கிளீன் போல்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின் ராகுலுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். இருவரும்  பொறுப்புடன் விளையாடி வந்தனர். ராகுல் 30 ரன் எடுத்த நிலையில், முகமது நபி பந்தை ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ செய்ய முயன்று ஹஜ்ரதுல்லா ஜஜாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே நேரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி இந்த தொடரில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 48 பந்தில் அரைசதம் அடித்தார். நான்காவது வீரராக களம் வந்த விஜய் சங்கர் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீண் செய்தார். இவர் 29 ரன் எடுத்தார்.

முக்கிய கட்டத்தில் முகமது நபி திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் கோஹ்லி வெளியேற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோஹ்லி 67 ரன் (63 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். இந்த அணிக்கு கைகொடுப்பார் என எதிர்பார்த்த தோனி, ஆமை வேகத்தில் விளையாடி பொறுமையை சோதித்தார். மறுமுனையில் கேதர் ஜாதவும் திணறினார். இதைப் பயன்படுத்தி வங்கதேச கேப்டன் குல்பதின் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீச செய்தார். இதனால், இந்தியாவின் ரன் ரேட் உயராமல் இருந்ததோடு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தது. ஆமை வேகத்தில் விளையாடிய தோனி 52 பந்தில் 28 ரன் எடுத்து ரஷித்கான் ‘சழலில்’ சிக்கினார்.

ஒருமுனையில் கேதர் ஜாதவ் போராட, ஹர்திக் பாண்ட்யா (7), முகமது ஷமி (1) சொதப்பினர். கடைசி கட்டத்தில் அசத்தி கேதர் ஜாதவ் 66 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 52 ரன் (68 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. குல்தீப் (1), பும்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆப்கன் தரப்பில் குல்புதீன், முகமது நபி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எளிதான இலக்கை துரத்திய ஆப்கன் அணிக்கு முகமது ஷமி, பும்ரா இருவரும் வேகத்தில் தொல்லை கொடுத்தனர். இருந்தும் அப்கனுக்கு அதிர்ஷ்டம்  கைகொடுத்தது. முகமது ஷமி பந்தில் ஹஜ்ரதுல்லா ஜஜாய் (10) ‘ஸ்டெம்புகள் சிதற’ போல்டானார். பின் குல்புதினுடன் ரஹ்மத் ஷா இணைந்தார். தொடக்கத்தில்  தடுமாறிய குல்புதின், பாண்ட்யா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாட சரிவிலிருந்து ஆப்கன் மீளத் துவங்கியது. இருந்தும் பாண்ட்யா பந்தில் குபுதின் (27) ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் 29வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் ரஹ்மத் ஷா (36), கு,ல்புதின் (21) வெளியேற ஆட்டம் பரபரப்பானது. 27வது ஓவரில் ஆப்கன் 100 ரன் கடந்தது. சகால் பந்தில் முன்னாள் கேப்டன் அஸ்கார் ஆப்கன் (8) வீழ்ந்தார். முக்கிய கட்டத்தில் நஜிபுல்லா ஜத்ரான் (21) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், முகமது நபி, ரஷித்கான் இருவரும் அசத்தலாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். 5 ஓவரில் 36 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் சகால் பந்தில் ரஷித்கான் (14) ஆட்டமிழந்தார். 47வது ஓவரின் முடிவில் ஆப்கன் 200 ரன் எடுத்தது. இந்த நேரத்தில் பும்ரா, ஷமி மிரட்ட ஆட்டம் பரபரப்பானது. 49வது ஓவரை வீசிய பும்ரா 5 ரன்னே விட்டுக் கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட ஷமி பந்து வீச வந்தார், முதல் பந்துல் நபி பவுண்டரி விளாசினார். இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்க வில்லை. பின் அடுத்த 3 பந்தில் முகமது நபி (52), அல்டாப் ஆலம் (0). முஜீப் உர் ரஹ்மான் (0) ஆட்டமிழக்க ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். முடிவில் ஆப்கன் 50 ஓவரில் 213 ரன்னுக்கு ஆட்டழந்து 11 ரன்னில் பரிதாபமாக தோற்றது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4, பும்ரா, சகால், பாண்ட்யா தலா 2 விக்கெட்   சாய்த்தனர். பவுலிங்கில் அசத்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியால் இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டியில் 4 வெற்றி, ஒரு ஆட்டம் ரத்து என மொத்தம் 9 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. 6 போட்டியிலும் தோல்வி ஆப்கன் அணி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டுகிறது.


தோனிக்கு எதிர்ப்பு


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 52 பந்தில் 28 ரன்கள் மட்டும் எடுத்த தோனிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கனுக்கு எதிராக கோஹ்லி தவிர மற்ற வீரர்கர் ரன் எடுக்க திணறிய நிலையில், அணியை தோனி காப்பாற்றுவார் னெ ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்,  பள்ளி சிறுவனைப் போல் விளையாடிய தோனி 52 பந்தில் 28 ரன்கள் மட்டும் எடுத்தார். 345 போட்டிகளில் பங்கேற்ற இவர், போதிய சர்வதேச அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைத்தளங்களில், 37 வயதான தோனியை வறுத்தெடுக்கத் துவங்கி விட்டனர்.

ஒரு ரசிகர் கூறுகையில், ஆப்கனுக்கு எதிராக செஸ் விளையாடவில்லை. கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பதை தோனி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்,  யாராவது அவருக்கு நினைவுபடுத்துங்கள், என்றார். மற்றொரு ரசிகர்,டெஸ்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது எவ்வித டெஸ்டிலும் பங்கேற்காமல் உள்ள இவர், தான் சிறந்த டெஸ்ட் வீரர் என்பதை நிரூபிக்கிறார், என்றார். மற்றொருவர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் வெறறி பெற்றால் மகிழ்ச்சிடைவேன்.   அப்போது தான் தோனிக்கு பதில் ரிஷாப் பன்ட்டை களமிறக்க வேண்டிய நெருக்கடி, கோஹ்லிக்கு ஏற்படும், என்றார்.