ஆப்கனை அடித்து விரட்டுமா இந்தியா

பதிவு செய்த நாள் : 21 ஜூன் 2019

சவுத்தாம்டன்


உலக கோப்பை தொடரில் நாளை நடக்க உள்ள முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மோதுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில்,  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும்  அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

சவுத்தாம்டனில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 28வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மோதுகிறது. தரவரிசையில் இந்தியா 2, ஆப்கானிஸ்தான் 10வது இடத்தில் உள்ளன.

உலக கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றி வேண்டும் என்ற துடிப்பில் களமிறங்கியுள்ள இந்திய அணி அதற்கேற்ப விளையாடியும் வருகிறது. இதுவரை  விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான துவக்க போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதித்தது. உலக கோப்பை தொடரில் முதல்முறையாக ஆஸி.,யை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ய எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய அணிக்கு ஏமாற்றமே கிடைத்தது. இப்போட்டி மழையால் ரத்தானது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது. இதையடுத்து நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடி க்கிறது.

ஆஸி.,க்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய தவான், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தும் அவரது இடத்தில் களமிங்கிய லோகேஷ் ராகுல், பாகிஸ்தானுக்கு எதிராக (57) அரைசதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் ரோகித் சர்மா ரன்வேட்டை நடத்தி வருகிறார். இவர் இதுவரை பங்கேற்ற மூன்று போட்டிகளில் முறையே 122*, 57, 140 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது ரோகித் இரண்டு போட்டியில் சதம் அடித்துள்ளார். கேப்டன் கோஹ்லி, பாண்ட்யா, தோனி ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்,. தவிர, கேதர் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோரும் மிடில் ஆர்டரில் கைகொடுக்க தயாராக உள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சும் பலமாக உள்ளது. காயம் காரணமாக அடுத்த ரண்டு போட்டியில் புவனேஷ்வர் குமார் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்ட போதிலும் அவரது இடத்தில் களமிங்க உள்ள முகமது ஷமி சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தி வருகிறார். இதனால், புவனேஷ்வர்  இல்லாதது பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பலாம். வேகத்தில் பும்ரா மிரட்டுகிறார். ‘சுழலில்’ ’சைனாமேன்’ குல்தீப், சகால் இருவரும் விக்கெட் வேட்டை நடத்துகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக பாபர் ஆசமை குல்தீப் போல்டு செய்த விதம் இந்த தொடரில் சிறப்பான பந்துவீச்சாக அமையும் என நம்பலாம். பாண்ட்யா வேகத்தில் விவேகம் இல்லை. அணியில் ஜாதவ், விஜய் சங்கர் போன்ற பார்டைம் பவுலர்கள் இருப்பது கூடுதல் பலம். பாகிஸதானுக்கு எதிராக    விளையாடிய விஜய் சங்கர், தனது முதல் பந்தில் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தி நுதி சாதனை படைத்தார். பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் பீல்டிங் இருப்பது சிறப்பு. பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால், நான்காவது வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது.

உலக கோப்பை தொடருக்கு இரண்டாவது முறையாக (2015, 2019) தகுதி பெற்றுள்ள ஆப்கன் அணி பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால், லீக்  சுற்றில் இந்த அணி நட்சத்திர அணிகளுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இந்த அணி இதுவரை விளையாடிய ஐந்து (ஆஸி.,  இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து) போட்டிகளிலும் பரிதாபமாக தோற்று புள்ளி ஏதும் எடுக்காமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில்  உள்ளது. இதனால், இந்த அணியின் அரைஇறுதி கனவு தகர்ந்துவிட்டது.

துவக்க வீரர் முகமது ஷஜாத் விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. முகமது நபி, அஸ்கார் ஆப்கன், ரஹ்மத் ஷா, சமியுல்லா ஷின்வாரி  உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே நேநம் அப்கன் பந்து வீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த அணி அதிகம் நம்பியிருந்த ரஷித்கான்,  முஜீப் உர் ரஹ்மான் இருவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். ஒரு போட்டியில் மட்டும் அசத்திய முகமது நபி, சமீபத்திய போட்டிகளில் அதிக ரன்னை விட்டுக்  கொடுக்கிறார்,  தவ்லத் ஜத்ரான், ஹமித் ஹாசன் வேகத்தில் விவேகம் இல்லை. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணிக்கு  நெருக்கடி கொடுக்க முடியும்.

வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் ‘அனல்’ பறக்கும் என எதிர்பார்க்கலாம்.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை இரண்டுமுறை மோதி உள்ளன. இதில், இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் ‘டை’யில் (சமன்)  முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.