இங்கிலாந்துக்கு இலங்கை ‘ஷாக்’

பதிவு செய்த நாள் : 21 ஜூன் 2019

லண்டன்


உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இந்த முறை 20 ரன்னில் இலங்கையிடம் வீழ்ந்தது. மலிங்கா 4 விக்கெட்  வீழ்த்தினார்

ஐ.சி.சி., நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றம் வேல்சில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரின் 27வது லீக் போட்டி  லண்டன் லீட்சில் இன்று நடந்தது. இதில், முன்னாள் சாம்பியன் இலங்கையை எதிர்த்து உள்ளூர் அணியான இங்கிலாந்து மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் கருணாரத்னே முதலில் ‘பேட்டிங்’கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் ஜீவன் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணான்டோ தேர்வாகினர். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் கருணாரத்னே (1) வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் பந்தில் குசால் பெரேரா (2) ஆட்டமிழந்தார். பின் இணைந்த அவிஷ்கா பெர்ணான்டோ, குசால் மெண்டிஸ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை  மீட்டது. ஆர்ச்சர் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பெர்ணான்டோ, ஆட்டத்தின் 10வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்  அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது மார்க் உட் பந்தில் பெர்ணான்டோ (49) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் வீசிய 16, 20வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் குசால் மெண்டிஸ். அடில் ரஷித் வீசிய 30வது ஓவரில் குசால் மெண்டிஸ் (46), ஜீவன் மெண்டிஸ் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். நிதானமாக ஆடிய மாத்யூஸ், ஜோ ரூட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, 84 பந்தில் அரைசதமடித்தார். ஆர்ச்சர் பந்தில் தனஞ்செயா டி சில்வா (29), திசாரா பெரேரா (2) அவுட்டாகினர். மார்க் உட் வேகத்தில் இசுரு உதானா (6), லசித் மலிங்கா (1) பெவிலியன்  திரும்பினர். பொறுப்பாக ஆடிய மாத்யூஸ், ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். முடிவில் இலங்கை அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 232  ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (85), நுவான் பிரதீப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர், மார்க் உட் தலா 3, ரஷித் 2 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு மலிங்கா வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது பந்தில் பேர்ஸ்டோவ் (0), வின்ஸ் (14) ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்கன் (21) ஏமாற்றினார். சரினிலிருந்து மீட்ட ஜோ ரூட் (57) அரைசதம் கடந்தார். பட்லர் (10), மொயீன் அலி (16), வோக்ஸ் (2), அடில் ரஷித் (1)    சொதப்பினர். ஒருமுனையில் போராடிய ஸ்டோக்ஸ் 61 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள்   எடுத்து திணறியது.

இந்த நிலையில் ஸ்டோக்சுடன் ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில் உதானா பந்தில் ஜோப்ரா (3)  ஆட்டமிழந்தார். 38 பந்தில் 47 ரன தேவைப்பட கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இந்த நிலையில், ஸ்டோக்ஸ் போராடினார். 45.2 ஓவரில் இங்கிலாந்து  200 ரன் கடந்தது. ஆட்டத்தின் 47வது ஓவரை பிதீப் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய ஸ்டோக்ஸ் 5வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இந்த  நிலையில்ல கடைசி பந்தை சந்தித்த மார்க் உட் (0) விக்கெட்கீப்பர் குசால் பெரேராவிடம் கேட்ச் கொடுக்க இங்கிலாந்து அணி 47 ஓவரில் 212 ரன்னுக்கு    ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. ஸ்டோக்ஸ் 82 (89 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் மலிங்கா 4, டிசில்வா 3,  உதானா 2 விக்கெட் வீழ்த்தினர். பவுலிங்கில் கலக்கிய மலிங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.