வங்கத்தை வதைத்தார் வார்னர்

பதிவு செய்த நாள் : 20 ஜூன் 2019

நாட்டிங்காம்


உலக கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் வார்னர் (166), கவானா (89) கைகொடுக்க 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் இன்று நடந்த 26வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வங்கதேசம் மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப், ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட ஸ்டாய்னிஸ், ஜாம்பா, கூல்டர் நைல் வாய்ப்பு பெற்றனர். வங்கதேச அணியில் சைபுதின், மொசாதக்கிற்குப்பதில் சபிர் ரஹ்மான், ருபைல் ஹொசைன் இணைந்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. 17வது ஓவரில் ஆஸி., 100 ரன் எடுத்தது. அதோடு, இருவரும் அரை சதம் கடக்க ஸகோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 121 ரன்கள் (20.5 ஓவர்) சேர்த்தபோது, கேப்டன் ஆரோன்பின்ச் (53) ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த வார்னர், ஒரு நாள் அரங்கில் 16வது சதம் அடித்தார். இவர் 110 பந்தில்சதம் விளாசினார், நடப்பு உலக கோப்பை தொடரில் இவர் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். வார்னர் 166 (147 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) ரன்களில் அவுட்டானார். கவாஜா (89) அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் (32) ரன் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் (1) ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. மீண்டும் துவங்கிய போட்டியில் ஸ்டாய்னிஸ் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. ஸ்டாய்னிஸ் (17), அலெக்ஸ் கேரி (11) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் சவுமியா சர்கார் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் 910) பரிதாபமாக ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதே நேரம் தமீம் கபால் (62) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய சாகப் அல் ஹசன் (41) ஸ்டாய்னிஸ் வேகத்தில் சரிந்தார். லின்டன் தாஸ் (20) ஏமாற்றினார். பின் முஸ்பிகுர் ரஹிமுடன் மகமதுல்லா இணைந்தார். இருவரும் ஆஸி., பந்துவீச்சை விளாசி அரைசதம் கடந்தனர். இருந்தும் 45வது ஓவரின் முடிவில்தான் வங்கதேசத்தால் 300 ரன் எடுக்க முடிந்தது. 5 ஓவரில் 82 ரன் தேவைப்பட்டது.

இந்த நேரத்தில் கூல்டர் நைல் பந்தில் மகமதுலலா (69) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சபீர் ரஹ்மான் கிளீன் போல்டாக ஆட்டம் பரபரப்பானது. மெஹதி ஹசன் (6) சொதப்பினார். அபார ஆட்டத்தை வெளிப்படத்திய முஸ்பிகுர் ரஹிம் 95 பந்தில் சதம் அடித்தார். ஸ்டாய்னிஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மொர்டசா (6) வெளியேற வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் எடுத்து பரிதாபமாக தோற்றது. முஸ்பிகுர் ரஹிம் (102) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் கூல்டர் நைல், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ் தலா 2  விக்கெட் சாய்த்தனர். பேட்டிங்கில் கலக்கிய வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெறறியின் மூலம் ஆஸி., இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்ற, ஒரு தோல்வி என மொத்தம் 10 புள்ளிகளுடன்  புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.