வில்லியம்சன் சதம்: நியூசி., வெற்றி

பதிவு செய்த நாள் : 20 ஜூன் 2019

பர்மிங்காம்


உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் கேப்டன் வில்லியம்சன் (103*), கிராண்ட்ஹோம் (60) கைகொடுக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாது புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதே நேரம் நான்காவது தோல்வியை சந்தித்து தென் ஆப்ரிக்கா முதல் சுற்றுடன் மூட்டையை கட்டுவது உறுதியாகிவிட்டது.

இங்கிலாதில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நேற்று நடந்த 25வது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தென் ஆப்ரிக்காவுக்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. அதாவது இந்த அணிக்கு வெற்றி முக்கியம் என இருந்தது. அதே நேரம் நியூசிலாந்து அணி இதுவரை தோல்வி அடையாமல் விளையாடி வந்தது.

பர்மிங்காமில் பெய்த மழை காரணமாக மைதான பகுதி ஈரமாக இருந்தது. இதனால் டாஸ் போட தாமதம் ஆனது. ஒன்றரை மணி நேரத்திற்குப்பின், போட்டி துவங்கியது. தலா 49 ஓவராக குறைக்கப்பட்டது. இதில், ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட நிகிடி இணைந்தார். நியூசிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் (5), கேப்டன் டுபிளசி (23) ஏமாற்றினர். பொறுப்புடன் விளையாடி வந்த ஆம்லா (55) அரை சதம் கடந்தார். கிராண்ட்ஹோம் பந்தில் மார்க்ராம் (38) ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மில்லர் 37 பந்தில் 36 ரன்களில் அவுட்டானார். வான் டெர் அரை சதம் விளாசினார். பெலுக்வாயோ ‘ட்க்&அவுட்’ ஆனார், தென் ஆப்ரிக்க அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. வான் டெர் (67), மோரிஸ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார். பவுலட், கிராண்ட்ஹோம், சான்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலுக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ரபாடா வேகத்தில் மன்ரோ (9) சரிந்தார். பின் கப்டிலுடன் கேப்டன் வில்லியம்சன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த நிலையில், பெலுக்வாயோ பந்தில் கப்டில் (35) வெளியேறினார். முக்கிய கட்டத்தில் கிறிஸ் மோரிஸ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த ஆட்டம் பரபரப்பானது. இவரது பந்தில் டெய்லர் 91), லதாம் 91) நடையை கட்டினர். இருந்தும் ஒருமுனையில் கேப்டன் வில்லியம்சன் போராட 22.4 ஓவரில் நியூசி., 100 ரன் எடுத்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் 72 பந்தில் அரைசதம் அடிக்க சரிவிலிருந்து நியூசி., மீளத் துவங்கியது. இந்த நேரத்தில் நீஷம் (23) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாட ஆட்டம் சூடுபிடித்தது. 44வது ஓவரில் நியூசி., 200 ரன் எடுத்த  போது அணியின் வெற்றி உறுதியானது. இதை உறுதி செய்யும் வகையில் கிராண்ட்ஹோம் 39 பந்தில் அரைசதம் அடித்தார். 2 ஓவரில் 14 ரன் தேவைப்பட்டது. அப்போது நிகிடி வேகத்தில் கிராண்ட்ஹோம் (60) சரிந்தார். அடுத்து சான்ட்னர் களம் வந்தார். ஒரு ஓவரில் 8 ரன் தேவைப்பட பெலுக்வாயோ பந்து வீச வந்தார். முதல் பந்தில் சாஜனட்னர் 1 ரன் எடுத்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு விளாசிய வில்லியம்சன் 137 பந்தில் சதம் கடந்தார்.

முடிவில் நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் (103), சானன்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட் சாய்த்தார். சதம் விளாசிய வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.