உலக கோப்பை: தவான் விலகல்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2019

லண்டன்


உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உல கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரே,யா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் ரவுண்ட்ராபின் லீக் முறையில் நடக்கிறது. இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் களமிறங்கியுள்ள இந்திய அணி தற்கு ஏற்ப விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளில் 3 வெற்றி (தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா. பாகிஸ்தான்) ஒரு ஆட்டம் ரத்து (நியூசிலாந்து) என மொத்தம் 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த மெகா தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் இருவரும் துவக்க வீரர்களாக களமிங்கினர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான துவக்க போட்டியில் தவான் 8 ரனனில் ஆட்டமிழந்தார். ஆனால், ஆஸி.,க்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 109   பந்தில் 117 (16 பவுண்டரி)சதம் விளாசி அசத்தினார். இவரது ஆட்டத்தால் இந்திய அணி 36 ரன்னில் ஆஸி.,யை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பை வரலாற்றில் ஆஸி.,யை இந்திய அணி வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். தவிர சதம் அடித்த தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே ரோகித் பார்மில் உள்ள நிலையில், இந்த மெகா தொடரில் ரோகித், தவான் ஜோடி சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆஸி.,க்கு எதிரான போட்டியில் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் இவரது இடது கை பெருவிரலை தாக்கியது. ;ஸ்கேன் செய்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, அடுத்த இரண்டு போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும், காயத்திலிருந்து தவான் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், மாற்று வீரர் யார் என்பதை இந்திய அணி நிர்வாகம் வெளியிடாமல் இருந்தது. இதற்கிடையே, காயம் குணமடையாத காரணத்தால் தவான் உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். இவருக்குப்பதில் அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடரில் அசத்தும் இவர் அணியில் இல்லாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தவிர இவர் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தவான் இடத்தில் களமிங்கிய ராகுல் (57) அரைசதம் அடித்தார். இருந்தம் அடுத்து வரும் போட்டிகளில் இவரது செயல்பாடு எப்படி இருக்கும் என தெரியவில்லை.

ஐ.சி.சி., நடத்தும் தொடர்களில் எப்போதுமே தவான் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டிலும் சேர்த்து தவான் 1238 ரன்கள் (20 போட்டி, 6 சதம்) எடுத்துள்ளார். இதில், உலக கோப்பையில் இவர் பங்கேற்ற 10 போட்டிகளில் 537 ரன்கள் (சராசரி: 53.70) எடுத்துள்ளார். இந்த உலக கோப்பையில் இவர் அடித்த சதம் காரணமாகத்தான் ஆஸி.,க்கு எதிரான போட்டியில் இந்தியாவால் 352 என்ற மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடிந்தது.