வங்கத்திடம் வீழ்ந்தது விண்டீஸ்

பதிவு செய்த நாள் : 17 ஜூன் 2019

டான்டன்


உலக கோப்பை தொடரில் வெஸ்ட்ண்டீசுக்கு எதிரான லீக் போட்டியில் சாகிப் அல் ஹசன் (124*), லின்டன் தாஸ் (94*) கைகொடுக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.

சர்வஙதச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. டான்டனில் இன்று நடந்த  23வது லீக் போட்டியில் வெஸ்ட்ண்டீஸ், வங்கதேச அணிகள் மோதின. இதில், ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் மொர்டசா முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார்.

விண்டீஸ் அணிக்கு கெய்ல், லீவிஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் மூன்று ஓவரில் 4 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டன. 13 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் திணறிய கெய்ல், சைபுதின்பந்தில் அவுட்டானார். பின் லீவிசுடன் ஷாய் ஹோப் இணைந்தார். ஒருமுனையில் லீவிஸ் விளாச, மறுமுனையில் ஹோப் பொறுப்புடன் விளையாடி வந்தார். அதிரடியாக விளையாடி வந்த எவின் லீவிஸ் 58 பந்தில் அரைசதம் அடித்தார். விண்டீஸ் 22.4 ஓவரில் 100 ரன் எடுத்தது. தன்பங்கிற்கு ஹோப் 75 பந்தில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், சாகிப் அல் ஃசன ‘சுழலில்’ எவின் லீவிஸ சிக்கினார். இவர் 70 ரன் (67 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். முக்கிய கட்டத்தில் நிகோஸ் பூரன் (25), ஹெட்மயர் (50) கைகொடுத்தனர். அதிரடி வீரர் ஆன்ட்ரே ரசல் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஹோல்டர் 15 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 33 ரன் எடுத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், முஸதபிஜுர் ரஹ்மான் வேகத்தில் ஹோப் சரிந்தார். இவர் 96 ரன் (121 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். முகமது சைபுதின் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில்    பிராவோ (19) ஆட்டமிழந்தார். முடிவில் வெஸ்ட்ண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. தாமஸ் (6) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேச தரப்பில் முகமது சைபுதின், முஸதபிஜுர் ரஹ்மான் தலா 3, சாகிப் அல் ஹசன் 2 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தமீம் இக்பால், சவுமியா சர்கார் இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இத ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன் (8.2 ஓவர்) சேர்த்த நிலையில், ரசல் வேகத்தில் சவுமியா சர்கார் (29) சரிந்தார். பின் தமீம் இக்பாலுடன் சாகிப் அல் ஹசன் இணைந்தார். இருவரும் வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு ரன் எடுத்து வந்தனர். 13.5 ஓவரில் வங்கதேசம் 100 ரன் கடந்தது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்   தமீம் இக்பால் (48) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். தாமஸ் பந்தில் முஷ்பிகுர் ரஹிம் (1) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த  போதும் சாகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இவர் 40 பந்தில் அரைசதம் அடித்தார்.

அடுத்து வந்த லின்டன் தாஸ், சாகிபிற்கு கம்பெனி கொடுத்தார். 29வது ஓவரின் முடிவில் வங்கதேச் 200 ரன் எடுத்து வலுவதன நிலையில் இருந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாகிப் அல் ஹசன் ஓருநாள் போட்டியில் தனது 9வது சதத்தை பதிரவ செய்ய ரங்கமே அதிர்ந்தது. இவர் 83 பந்தில் சதம் விளாசினார். இவருக்கு கம்பெனி கொடுத்த லின்டன் தாஸ் 43 பந்தில் அரைசதம் அடித்த போது வங்கதேச வெற்றி பிரகாசமானது. ஆட்டத்தின் 38வது ஓவரை கேப்ரியல்  வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்தை லின்டன் தாஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்தார். தவிர, இந்த ஓவரில் மொத்தம் 24 ரன்கள் கிடைத்தது. 40வது ஓவரில் வங்கதேசம் 300 ரன்னை கடந்த போது இந்த அணியின் வெற்றி உறுதியானது.

முடிவில் வங்கதேச அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாகிப் அல் ஹசன் 124 (99 பந்து, 16 பவுண்டரி), லின்டன் தாஸ் 94 (69 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடைசி வரை ஆட்டமிழக்காமல் 189 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ரசல், தாமஸ் தலா 1 விக்கெட் சாய்த்தனர். பேட்டிங் மற்றம் பவுலிங்கில் கலக்கிய சாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு போட்டி ரத்து என மொத்தம் 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. 5 போட்டியில் 3 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ள வெஸ்ட்இண்டீஸ் 7வது இடத்தில் நீடிக்கிறது.