கிரிக்கெட் போரில் இந்தியா வெற்றி

பதிவு செய்த நாள் : 17 ஜூன் 2019

மான்செஸ்டர்


உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா (140), கோஹ்லி (77), ராகுல் (57) கைகொடுக்க டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 89  ரன்னில் இந்தியாஅபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா,  வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில்,  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும்  அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

மான்செஸ்டரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 22வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.  வருணபகான் கருணைகாட்ட திட்டமிட்டபடி போட்டி துவங்கியது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற பாக்., கேப்டன் சர்பராஸ்  அகமது முதலில் ‘பீல்டிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகிய நிலையில், அவரது இடத்தில் தமிழக 'ஆல்-ரவுண்டர்'  விஜய் சங்கர் தேர்வானார். பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம், ஷதாப் கான் இடம் பிடித்தனர்.

ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கினார். இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். முகமது ஆமிர்   பந்துவீச்சை கவனத்துடன் ஆடிய நிலையில், மற்ற பவுலர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதையடுத்து ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. எதிரணி  பந்து வீச்சை நாலா புறமும் பறக்கச் செய்த ரோகித் சர்மா 34 பந்தில் அரைசதம் அடித்தார். 17.3 ஓவரில் இந்தியா 100 ரன் கடந்தது. சோயப் மாலிக் பந்தை சிக்சருக்கு விளாசிய ராகுல், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 69 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க    பாக்., கேப்டன் சர்பராஸ் அகமது கடுமையாக முயற்சி செய்தார்.

இநத ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன் (23.5 ஓவர்) சேர்த்த நிலையில், வகாப் ரியாஸ் பந்தில் ராகுல் 57 ரன் (78 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து  ஆட்டமிழந்தார். இதுவே உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், 1996ல் நடந்த உலக  கோப்பை கால்இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சித்து, சச்சின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது தான் அதிகபட்சமாக இருந்தது. அடுத்து பலத்த கரகோஷத்திற்கு இடையே கேப்டன் கோஹ்லி களம் வந்தார். இவர் பொறுப்புடன் விளையாட ரோகித், தனது அதிரடியை தொடர்ந்தார். ‘ருத்ரதாண்டவம்’ ஆடிய ரோகித் 85 பந்தில் சதம் விளாச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித்தின் 24வது சதமாகும். பொதுவாக ரோகித்  சதம் கடந்தார் என்றால் இரட்டை சதம் நோக்கி பயணிப்பார். இந்த முறையும் அதே பாணியில் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இவருக்கு கோஹ்லி கம்பெனி கொடுக்க 34.2 ஓவரில் இந்தியா 200 ரன் கடந்தது. அப்போது இந்த போட்டியில் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும்  என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், கோஹ்லி 51 பந்தில் அரைசதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் இவரது 51வது  அரைசதமாகும். கோஹ்லி 57 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டியில் மிக விரைவாக 11 ஆயிரம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார். இவர் சச்சின் சாதனையை முறியடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த நிலையில், ஹசன் அலி பந்தை தேவையில்லாமல ‘ஸ்கூப்’ செய்து ரோகித் ஆட்டமிழந்தார். இவர் 140 ரன் (113 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து வெளியேறினார். பின் கோஹ்லியுடன் பாண்ட்யா இணைந்தார். முதல் 6 ஓவரில் 18  ரன்மட்டுமே விட்டுக் கொஆட்த முகமது ஆமிர் கடைசி கட்டத்தில் பந்து வீச வந்தார்.

இவரது வேகத்தில் பாண்ட்யா (26), தோனி (1) சரிந்தனர். பின் திடீரென மழை வர ஆட்டம் தடைபட்டது. பின் ஆட்டம் துவங்கிய போது பவுண்டரி விளாசிய கோஹ்லி 77 ரன் (65 பந்து, 7 பவுண்டரி) எடுத்து முகமது ஆமிர் பந்தில் விக்கெட்கீப்பர் சர்பராஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டி.வி, ரீப்ளேவில்  பந்து கோஹ்லி பேட்டில் படாதது தெரியவந்தது. இருந்தும் 3வது நடுவரின் உதவியை நாடாமல் கோஹ்லி வெளியேற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி  கட்டத்தில் விஜய் சங்கர் (15), கேதர் ஜாதவ் (9) கைகொடுக்க இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. பாக்., தரப்பில் முகமது ஆமிர்  3, வகாப் ரியாஸ், ஹசன் அலி தலா 1 விக்கெட் சாய்த்தனர். நேற்¬யை போட்டியில் பாகிஸ்தான் பீல்டிங் படுமோசமாக இருந்தது.

கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகார் ஜமான் இருவரும் துவக்கம் தந்தனர். இந்த ஜோடிக்கு புவனேஷ்வர் குமார் வேகத்தில் தொல்லை கொடுத்தார். வழக்கம் போல் பும்ராவும் நெருக்கடி கொடுக்க ஸ்கோர்ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஆட்டத்தின் 5வது ஓவரை விஜய் சங்கர் வீசினார். இவர்  வீசிய முதல் பந்தில் இமாம் உல் ஹக் (7) எல்.பி.டபுள்யு., ஆனார். உலக கோப்பை தொடரில் அறிமுக வீரர் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில்  விஜய் சங்கர் 3வது இடத்தைப் பிடித்தார். அடுத்து இளம் வீரர் பாபர் ஆசம் களம் வந்தார். 13வது ஓவரின் முடிவில் பாக்., 50 ரன் கடந்தது. அதிரடியாக விளையாடிய பகார் ஜமான் 59 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு பாபர் ஆசம் கம்பெனி கொடுக்க பாக்., 22வது ஓவரில் 100 ரன் கடந்தது.

இந்த ஜோடி இரணடாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் ‘சுழலில்’ பாபர் ஆசம் (48) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய குல்தீப் இம்முறை  பகார் ஜமான் (62) விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் பரபரப்பானது. பாண்ட்யா வேகத்தில் ஹபீஸ் (9) சரிந்தார். பாண்ட்யாவின் அடுத்த பந்தில் சோயப் மாலிக்‘டக்-அவுட்’ ஆக ஆட்டம் இந்தியா வசம் திரும்பியது. விஜய் சங்கர் பந்தில் கேப்டன் சர்பராஸ அகமது (12) போல்டாக பாகிஸ்தான் தோல்வி உறுதியானது.

இதையடுத்து இமாத் வாசிமுடன் ஷதாப் கான் இணைந்ததார். இந்த பந்துவீச்சும் பீல்டிங்கும் பாக்., அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. பாகிஸதான் அணி 35  ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி  பாக்., 252 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அதாவது 86 ரன்கள் பின்தங்கி இருந்தது.

பின் ஆட்டம் துவங்கிய போது 40 ஓவரில் பாக்., 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்தது. அதாவது 5 ஓவரில் 136 ரன் எடுக்க வேண்டும் என இருந்தது. ஆனால் 40 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன் மட்டுமே எடுத்து படுதோல்வியுடைந்தது. இமாத் வாசிம் (46), ஷதாப்கான் (20)  அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், விஜய் சங்கர். பாண்ட்யா தலா 2 விக்கெட் சாய்த்தனர். சதம் அடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக  தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 3 வெற்றி (தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்), ஒரு ஆட்டம் ரத்து (நியூசிலாந்து) என மொத்தம் 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரம் 5 போட்டியின்  முடிவில் 3 புள்ளிகள் மட்டுமே பெற்ற பாக்., 9வது இடத்தில் உள்ளது. தவிர உலக கோப்பையில் இந்தியா 7வது முறையாக பாக்.,கை வீழ்த்தி வரலாற்று சாதனை  படைத்தது.