இலங்கையை வீழ்த்திய ஆஸி., ‘நம்பர்-1’

பதிவு செய்த நாள் : 15 ஜூன் 2019

லண்டன்


உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேப்டன் ஆரோன் பின்ச் (153) சதம், ஸ்டார்க் 4 விக்கெட் கைகொடுக்க 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸி., புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில், உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் முதலில் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடக்கிறது. லண்டனில் இன்று நடந்த 20வது லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை எதிர்த்து இலங்கை மோதியது. இதில், 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே, 'முதலில் பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 80 சேர்த்த போது வார்னர் (26)  அவுட்டானார். அபாரமாக ஆடிய பின்ச், ஒருநாள் அரங்கில் தனது 14வது சதமடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஸ்டீவ் ஸ்மித், அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்த போது பின்ச் 153 ரன் (132 பந்து, 15 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் (73) நம்பிக்கை தந்தார். ஷான் மார்ஷ் (3), அலெக்ஸ் கேரி (4), கம்மின்ஸ் (0) ஏமாற்றினர். இருந்தும், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (46), ஸ்டார்க் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் இசுரு உதானா, தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடி வந்த கருணாரத்னே 53 பந்தில் அரைசதம் அடித்தார். 12.4 ஓவரில் இலங்கை 100 ரன் கடந்தது, தன்பங்கிற்கு பெரேரா 33 பந்தில் அசைதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன் (15.3 ஓவர்) சேர்த்த நிலையில், ஸ்டார்க் பந்தில் பெரேரா (52) ஸ்டெம்புகள் சிதற போல்டானார். திருமானே (16) ஏமாற்றினார். சதம்  அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ரிச்சர்ட்சன் வேகத்தில் கருணாரத்னே சரிந்தார். இவர் 97 ரன் (108 பந்து, 9 பவுண்டரி) எடுத்தார். மெண்டிஸ் (30), மாத்யூஸ் (9), ஸ்ரீவர்தனே (3), திசாரா பெரேரா (7), உதானா (8), மலிங்கா (1) ஆட்டமிழந்தனர்.

கடைசியாக கம்மன்ஸ் பந்தில் பிரதீப் (0) வெளியேற இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது, டிசில்வா (16) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் ஸ்டார்க் 4, ரிச்சர்ட்சன் 3, கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். சதம் அடித்த ஆரோன் பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி., அணி இதுவரை விளையாடிய 5 போட்டியில் 4 வெற்றி, ஒரு தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.