இங்கிலாந்திடம் விண்டீஸ் ‘சரண்டர்’

பதிவு செய்த நாள் : 14 ஜூன் 2019

சவுத்தாம்ப்டன்


உலக கோப்பை தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான லீக்க் ஆட்டத்தில் ஜோ ரூட் (100* ரன், 2 விக்கெட்) கைகொடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த 19வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை எதிர்த்து உள்ளூர் அணியான இங்கிலாந்து மோதியது. இதில், ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பவுலிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

விண்டீஸ் அணிக்கு லீவிஸ் (2), ஷாய் ஹோப் (11) ஏமாற்றினர். கெய்ல் 36 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் ‘சுழலில்’ ஹெட்மயர் (39), கேப்டன் ஹோல்டர் (9) சிக்கினர். பொறுப்புடன் விளையாடிய நிகோலஸ் பூரன் (63) அரை சதம் கடந்தார். ரசல் 21 ரன்களில் திரும்பினார். ஆர்ச்சர் வேகத்தில் கார்லோஸ் பிராத்வைட் (14) ஆட்டமிழந்தார். கார்ட்ரல், கேப்ரியல் இருவரும் ‘டக்-அவுட்’ ஆக விண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தாமஸ் (0) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜோ ரூட் 2 விக்கெட் சாய்த்தார்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ், ஜோ ரூட் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். (காயம் காரணமாக ஜேசன் ராய் களமிங்கிவில்லை) இருவரும் எதிரணி பந்து வீச்சை அடித்து நொறுக்க ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன் (14.4 ஓவர்) சேர்த்த நிலையில், கேப்ரியல் பந்தில் பேர்ஸ்டோவ் 45 ரன் (46 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வோக்ஸ் களம் வந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 15வது ஓவரின் முடிவில் இங்கிலாந்து 100 ரன் எடுத்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. 31.5 ஓவரில் இங்கிலாந்து 200 ரன் எடுத்த போது அணியின் வெற்றி உறுதியானது.

இருந்தும் வோக்ஸ் 40 ரன் (54 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில், கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 93 பந்தில் சதம் அடித்தார். தவிர, இந்த தொடரில் இவர் அடிக்கும் ரண்டாவது சதம் இதுவாகும். முடிவில் இங்கிலாந்து அணி 33.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 100 (94 பந்து, 11 பவுண்டரி), ஸ்டோக்ஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 2 விக்கெட் சாய்த்தார். பேட்டில், பவுலுங் இரண்டிலும் கலக்கிய ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.