‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

நாட்டிங்காம்


உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள முக்கிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

நாட்டிங்காமில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 18வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதுகிறது. தவரிசையில் இந்தியா 2, நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளன.

உலக கோப்பையை மூன்றாவது முறையாக வெல்ல வேண்டும் என்ற துடிப்புடன் களமிங்கியுள்ள இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆஸி.,க்கு எதிரான ரண்டாலவது லீக் போட்டியில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதித்தது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சமபலத்துடன் காணப்படும் இந்திய அணிக்கு காயம் காரணமாக தவான் விலகியது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆஸி.,க்கு எதிரான போட்டியில் தவான் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்ததோடு ஆட்டநாயகனா விருது வென்றார். இவர் இல்லாத நிலையில், ரோகித்துடன் லோகேஷ் ராகுல் துவக்க வீரராக களமிங்க உள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோகித் சதம் அடித்தார். ஆஸி.,க்கு எதிராக அரைசதம் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார்.

நாட்டிங்காம் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளதால் இன்றைய போட்டியில் ரன்மழையை எதிர்பார்க்கலாம். இதன் காரணமாக தவான் இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இதில் தினேஷ் கார்த்திக்கிற்கே அதிக வாய்ப்புள்ளது. நான்காவது வீரராக கேதர் ஜாதவ், இதன் பின் தோனி, கார்த்திக், பாண்ட்யா என களமிறக்கப்படலாம். மிடில் ஆர்டரில் தோனி, பாண்ட்யா இருவரும் சிறப்பாக செயல்படுவது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர் குமார் இருவரும் வேகத்தில் அசத்துகின்றனர். குறிப்பாக துவக்கத்தில் பும்ராவும், கடடைசி கட்டத்தில் புவியும் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். இதைப் போன்று ‘சுழல்’ இரட்டையர்களான சகால், குல்தீப் இருவரும் சிறப்பாக பந்து வீசி அசத்துகின்றனர்.   குறிப்பாக சகால் விக்கெட் வேட்டை நடத்துகிறறார். இவர் இரண்டு போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அதோடு, பார்டைம் பவுலர் கேதர் ஜாதவ் பந்துவீச்சு எடுபடவில்லை. இருந்தும் பந்துவீச்சுக்கு பலமாக பீல்டிங் இருப்பது சிறப்பானது. பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது.

நியூசிலாந்தைப் பொறுத்தவரை இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை, கடந்த உலக கோப்பையில் பைனல் வரை முன்னேறிய நியூசி., ஆஸி.,யிடம் தோற்று  கோப்பை வாய்ப்பை தவறவிட்டது. இந்தமுறை கோப்பை கனவுடன் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி அதற்கேற்ப விளையாடியும் வருகிறது. இந்த அணி இதுவரை விளையாடிய மூன்று (இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்) போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, நியூசிலாந்து அணி பேட்டிங்கில் வலிமையாக உள்ளது. கப்டில், மன்ரோ இருவரும் சிறப்பான துவக்கம்தருகின்றனர்.தவிர, கேப்டன் வில்லியம்சன் சூப்பர் பார்மில் உள்ளார். அனுபவ வீரர் டெய்லர், கிராண்ட்ஷோம், நீஷம் என மிடில்ஆர்டர் வரிசையும் வலிமையாக உள்ளது.

மாற்க பந்து வீச்சில் நியூசி., சற்று பலவீனமாக உள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு பவுலட் பந்துவீச்சு இல்லை. ஹென்ரி சிறப்பாக செயல்படுவதால் அணியில் சவுத்தீக்கு இடம் கிடைக்கவில்லை. கிராண்ட்ஹோம், நீஷம் போன்றோர் பந்து வீச்சு எடுபடவில்லை. சுழலில் சான்டர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பலவீனமான பந்துவீச்சு பலமாக பீல்டிங் இல்லை. சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசி., தொடர் தோல்வியை«ª சந்தித்து வந்தது. பேட்டில், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

இந்த மைதானத்தில்தான் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 348 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த இங்கிலாந்து 334 ரன்கள் எடுத்து 14 ரன்னில் பரிதாபமாக தோற்றது. இந்தியா&நியூசி., அணிகள் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 106 முறை மோதி உள்ளன. இதில், இந்தியா அதிகபட்சமாக 55 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 45 ஆட்டத்தில் மட்டுமே நியூசிலாந்து தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி ‘டை’யில் (சமன்0 முடிந்த நிலையில், % ஆட்டம் ரத்தாகி உள்ளது.


நாட்டிங்காமில் மழை...


இங்கிலாந்து மண்ணில் மேகங்கள் சூழ்வதும் அடிக்கடி மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் லீக் சுற்றில் பல போட்டிகள் ரத்தாகின. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து உள்ளூர் நாட்டிங்காம் போஸ்ட் இணையதளத்தில்    வெளியான செய்தி: நாட்டிங்காமின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம், பீட்டர்ஸ்பர்க், நியூகேசில் பகுதிகளிலும் இது தொடரும். தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக வெள்ளம் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் போக்குவரத்திற்கு தொல்லை  ஏற்படும். தினமும் காலை முதல் இரவு வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இது 13ம் தேதி மதியம் வரை இது நீடிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் லீக் போட்டி நாட்டிங்காமில் நாளை நடக்கவுள்ளது. இங்கு மதியம் வரை மழை பெய்யலாம் என்பதால்    போட்டி முழுமையாக நடப்பது சந்தேகம் தான். தலா 25 அல்லது 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கலாம்.