ஆஸி.,யிடம் வீழ்ந்தது பாக்.,

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

டான்டன்


உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வார்னர் (107), கம்மின்ஸ் (3 விக்கெட்) கைகொடுக்க 41 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பாக்., வேகப்புயல் முகமது ஆமிர் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் சாய்த்தது வீணானது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 17வது லீக் ஆட்டம் டான்டனில் இன்று நடந்தது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து பாகிஸ்தான் மோதியது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். ஆஸி., அணியில் ஸ்டாய்னிஸ்,  ஜாம்பா நீக்கப்பட்டு ஷான் மார்ஷ், ரிச்சர்ட்சன் தேர்வாகினர். இதே போல் பாகிஸ்தான் தரப்பில் ஷதாப்கான் இடத்தில் அப்ரிடி சேர்க்கப்பட்டார்.

ஆஸி., அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், வார்னர் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். முகமது ஆமிரின் முதல் ஓவர் மெய்டினாக அமைந்தது. இதன் பின் பின்ச் அதிரடியில் இறங்கினார். துவக்கத்தில் சற்று தடுமாறிய வார்னர் பின்னர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸி., ரன் வேட்டையில் இறங்கியது. 16.4 ஓவரில் ஆஸி., 100 ரன் கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படத்திய ஆரோன் பின்ச் 63 பந்தில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 51 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 146 ரன் (22.1 ஓவர்) சேர்த்த நிலையில், முகமது ஆமிர் வேகத்தில் ஆரோன் பின்ச் சரிந்தார். இவர் 82 ரன் (84 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

இந்த சிறப்பான துவக்கத்தை அடுத்து வந்த வீரர்கள் பயன்படுத்த தவறினர். ஸ்டீவ் ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20) ஏமாற்றினர். அதே நேரம் எதரிணி பந்துவீச்சை துவம்சம் செய்த வார்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். இவர் 107 ரன் (111 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இதன்பின் ஆஸி., விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரி;ந்தன. கவாஜா (18), ஷான் மார்ஷ் (23), கூல்டர் நைல் (2), கம்மின்ஸ் (2) வெளியேறினர். கடைசி கட்டத்தில் சற்றேபோராடிய அலெக்ஸ் கேரி 20 ரன் எடுத்தார். கடைசியாக முகமது ஆமிர் பந்தில் ஸ்டார்க் (3) வெளியேற ஆஸி., 49 ஓவரில் 307 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ரிச்சர்ட்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது ஆமிர் 5 (10-2-30-5) விக்கெட் வீழ்த்தினார். அப்ரிடி 2 விக்கெட் சாய்த்தார்.

ஒருகட்டத்தில் ஆஸி., 2 விக்கெட்டுகளை இழந்து 223 (33.3 ஓவர்) ரன்கள் எடுத்திருந்த போது ஸ்கோர் 350 ரன்னை தாண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், முகமது ஆமிர் அபாரமாக பந்து வீசி ஆஸி.,யை நிலைகுலையச் செய்தார்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. கம்மின்ஸ் பந்தில் பகார் ஜமான் ‘டக்&அவுட்’ ஆனார். பின் இமாம் உல் ஹக்குடன் பாபர் ஆசம் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். இருந்தும் கூல்டர் நைல் வேகத்தில் பாபர் ஆசம் (30) சரிந்தார். முக்கிய கட்டத்தில் கம்மின்ஸ் திருப்புமுனை கொடுத்தார். இவரத பந்துவீச்சில் இமாம் உல் ஹக் (53), அனுபவ வீரர் சோயப் மாலிக் (0) ஆட்டமிழந்தனர். ஆரோன் பின்ச் ‘சுழலில்’ முகமது ஹபீஸ் (46) சிக்கினார். ஆசிப் அலி (5), ஹசன் அலி (32), வகாப் ரியாஸ் (45), முகமது ஆமிர் (0) ஆட்டமிழந்தனர். கடைசியாக கேப்டன் சர்பராஸ அகமது (40) பரிதாபமாக ரன் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. அப்ரிடி (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் கம்மின்ஸ் 3, ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா 2, கூல்டர் நைல், பின்ச் தலா 1 விக்கெட் சாய்த்தவர். சதம் விளாசிய வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.