தென் ஆப்ரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் மோதல்

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

சவுத்தாம்டன்


உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில்  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும்  அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

சவுத்தாம்டனில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 15வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதுகிறது. தவரிசையில் தென் ஆப்ரிக்கா 3, வெஸ்ட்இண்டீஸ் 8வது இடத்தில் உள்ளன.

உலக கோப்பையில் எட்டாவது முறையாக களமிங்கியுள்ள தென் ஆப்ரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு முறையும்  பெரும் எதிர்பார்ப்புடன் களமிங்கும் இந்த அணி ஏதாவது ஒருஇடத்தில் சறுக்கிவிடும். தற்போது டிவிலியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில், டுபிளசி தலைமையில் தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது. இந்த மெகா தொடரில் இதுவரை விளையாடிய மூன்று (இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா) ஆட்டத்திலும்  தென் ஆப்ரிக்கா பரிதாபமாக தோற்றது. உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

பேட்டிங்கில் சற்று வலிமையாக காணப்படும் தென் ஆப்ரிக்க அணியில் யாருமே பெரிய ஸ்கோரை பதிவு செய்யவில்லை. குயின்டன் டி காக், ஆம்லா இருவரில்  ஒருவர் சொதப்புவதால் அடுத்து வரும் கேப்டன் டுபிளசிக்கு அதிக நெருக்கடி ஏற்படுகிறது. வான்டர் டுசன், டுமினி, மில்லர் ஆகியோர் தொடர்ந்து சொதப்புகின்றனர். இந்தியாவுக்கு எதிராக கிறிஸ் மோரிஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி கட்டத்தில் ரபாடா சற்று விளாசுகிறார். பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்டைன் லிலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. தவிர லுங்கிடியும் காயமடைந்துள்ளார். இவர் இன்றைய    போட்டியில் பங்கேற்பாரா என தெரியவில்லை. இம்ரான் தாகிர் மட்டும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இன்றைய போட்டியில் தோற்றால் தென் ஆப்ரிக்கா லீக் சுற்றுடன் மூட்டையை கட்டவேண்டியதுதான், இனி வரும் 6 ஆட்டத்திலம் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெஸ்ட்இண்டீசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்க அணியில் ஒருசில மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

ஹோல்டர் தலைமையிலானவெஸ்ட்இண்டீஸ் அணி துவக்க போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்து நடப்பு சாம்பியன் ஆஸி.,யை எதிர்கொண்ட வெஸ்ட்இண்டீஸ் பரிதாபமாக தோற்றது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய வெஸ்ட்இண்டீஸ் அணி வேகத்தில் மிரட்டியது. இதையடுத்து ஆஸி., 5 விக்கெட் டுகளை இழந்து 79 ரன் எடுத்து திணறியது. இதன் பின் ஸ்டீவ் ஸமித் (73), கூல்டர் நைல் (92) அரைசதம் அடிக்க ஆஸி., 288 ரன் எடுத்தது. இதை சேஸ் செய்த  வெஸ்ட்இண்டீஸ் 14 ரன்னில் வீழ்ந்தது. கிறிஸ் கெய்ல், எவின் லூவிஸ், ஹோப், ஹெட்மயர், பூறன், ரசங், ஹோல்டர், பிராத்வைட் என பேட்டிங் வரிசை மிரட்டலாக  காணப்பட்டாலும் இரு வீரர்களே சிறப்பாக செயல்படுகின்றனர்.

இதே போல் பந்துவீச்சிலும் ஹோல்டர், காட்ரல், தாமஸ் டங்கிய வேக கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறது. அதே நேரம் கடைசி  கட்ட ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் பவுலர்கள் அதிக ரன்னை விட்டுக் கொடுக்கின்றனர். பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் இரண்டாவது வெற்றியை பதிவு  செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது. இரு அணிக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இந்த ஆட்டத்தில் ‘அனல்’ பறக்கும் என உறுதியாக நம்பலாம்.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 61 முறை மோதி உள்ளன. இதில், தென் ஆப்ரிக்கா அதிகபட்சமாக 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 15  ஆட்டத்தில் மட்டுமே வெஸ்ட்இண்டீஸ் தனது வெற்றியை பதிவு செய்தள்ளது. ஒரு போட்டி ‘டை’யில் (சமன்) முடிய, ஒரு ஆட்டம் ரத்தாகி உள்ளது.