இந்திய வெற்றி தொடருமா...!

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

லண்டன்


உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள முக்கிய லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லண்டனில் தற்போத மழை  பெய்து வருவதால் இப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா,  வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில்,  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும்  அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

லண்டனில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 14வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸதிரேலியாவை எதிர்த்து இந்தியா மோதுகிறது. எந்த ஒரு  தொடருக்கும் முதல் வெற்றி முக்கியம். இந்திய அணி துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தியது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் வலிமையாக உள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தவான், கேப்டன் கோஹ்லி சொதப்பிய போதும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ரோகித்திற்கு ராகுல், தோனி இருவரும் கம்பெனி கொடுத்தனர். மத்திய வரிசையில் கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா இருவரும் கைகொடுக்க தயாராக உள்ளனர்.

பந்து வீச்சை பொறுத்தவரை வேகத்தில் பும்ரா மிரட்டுகிறார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இவரது புயல்வேக பந்துவீச்சு அந்த அணியை நிலைகுலையச் செய்தது.  இதே போல் கடைசி கட்ட ஓவர்களில் புவனேஷ்வர் குமார் அசத்தினார். ஹர்திக் பாண்ட்யாவால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்றாலும் தனது பணியை  சிறப்பாகவே செய்தார். ‘சுழலில்’ இரட்டையர்களான சகால், குல்தீப் இருவரும் விக்கெட் வேட்டை நடத்தினர். இதில், சகால் சுழலில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள்  சிக்கினார். சகால் 4 விக்கெட் வீழ்த்தினார். டுமினி விக்கெட்டை குல்தீப் சாய்த்தார். இதுதவிர பார்டைம் பவுலர் கேதர் ஜாதவும் சிறப்பாக செயல்பட்டார். அதோடு,  பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கும் வகையில் பீல்டிங் இருந்தது.

லண்டன் ஓவல் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த போதும் இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. வெற்றிக் கூட்டணியே       தொடரும். பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தும்பட்சத்தில் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது.

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள ஆஸி., அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது. இதற்கு ஏற்றார் போல் இந்த தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கனுக்கு எதிரானன முதலாவது போட்டியில் எளிதான வெற்றியை பதிவு செய்த  ஆஸி., வலிமையான வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக போராடி வென்றது. ஆஸி.,யைப் பொறுத்தவரை அந்த அணியின் பிளஸ் பாய்ண்ட் போராட்ட குணம்தான். எந்த ஒரு சூழலிலும் கடுமையாக போராடினால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்த்தும் போட்டியாக ஆஸி.,&விண்டீஸ் ஆட்டம் அமைந்தது. இந்த போட்டியில் ஒரு  கட்டத்தில் ஆஸி., 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து திணறியது. இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் (73), கூல்டர் நைல் (92) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை 288 ரன்னுக்கு கொண்டு சென்றனர். வார்னர், கேப்டன் ஆரோன் பின்ச், கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில்  உள்ளனர். கடந்த இரண்டு போட்டியில் சொதப்பியதால் கவாஜா இடத்தில் ஷான் மார்ஷ் விளைளயாட வாய்ப்புள்ளது.

பந்துவீச்சில் ஆஸி., வலிமையாக காணப்பட்டாலும் கம்மின்ஸ், கூல்டர் நைல் இருவரது பந்துவீச்சு கடந்த இரண்டு போட்டியில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.  அதே நேரம் வேகத்தில் ஸ்டார்க் மிரட்டுகிறார். பார்டைம் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இருவரும் முக்கிய கட்டத்தில் அணிக்கு கைகொடுக்கின்றனர். சுழலில் ஆடம்  ஜாம்பா விக்கெட் வீழ்த்த திணறுகிறார். இவரது இடத்தில் நாதன் லியான் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. உலக கோப்பையில் ஆஸி., யின் ஆதிக்கமே அதிகம் காணப்படுகிறது. இவ்விரு அணிகள் உலக கோப்பையில் 11 முறை மோதி உள்ளன. இதில், ஆஸி., 8-3 என முன்னிலையில் உள்ளது.

லண்டனில் நேற்று பெய்த மழையால் இந்திய வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இந்த வார இறுதி வரை மழை வாய்ப்பு இருப்பதால் நாளைய ஆட்டம்  பாதிக்குமா என்ற அச்சமும் இருக்கிறது. பாகிஸ்தான், இலங்கை அணிகள் கார்டிப் மைதானத்தில் நேற்று மோத இருந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.  மழையால் ரத்து செய்யப்பட்டது.  ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ய ஆஸி.,யும், வெற்றியை தொடர இந்தியா போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  உள்ளது.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 136 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், ஆஸி., அதிகபட்சமாக 77 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 46  ஆட்டத்தில் மட்டுமே இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. 10 ஆட்டங்கள் ரத்தாகி உள்ளன.