வங்கத்தை வதைத்த இங்கிலாந்து

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

கார்டிப்


உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. கார்டிப் நகரில் நேற்று நடந்த போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில்  வங்கதேசத்தை வீழ்த்தியது. துவக்க வீரர் ஜேசன் ராய் 121 பந்தில் 153 ரன் விளாசினார்.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கார்டிப் நகரில் இன்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள்     மோதின. வங்கதேச அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு பதிலாக லியாம் பிளங்கட் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற  வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, பீல்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. சுழலில் அசத்திய சாகிப் அல் ஹசன், தனது முதலிரண்டு  ஓவரில் தலா ஒரு ரன் மட்டுமே வழங்கினார். இந்நிலையில் எழுச்சி கண்ட ஜேசன் ராய், மொர்டசா, சாகிப் வீசிய 6, 7வது ஓவரில் தலா 2 பவுண்டரி விளாசினார்.  இவருக்கு ஒத்துழைப்பு தந்த பேர்ஸ்டோவ், சைபுதின் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜேசன் ராய், சைபுதின் வீசிய 12வது ஓவரில்  தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். பொறுப்பாக ஆடிய பேர்ஸ்டோவ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள்  சேர்த்த போது மொர்டசா வேகத்தில் பேர்ஸ்டோவ் (51) வெளியேறினார்.

முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜேசன் ராய், ஒருநாள் அரங்கில் தனது 9வது சதத்தை பதிவு செய்தார். இவர், சாகிப் வீசிய 31வது ஓவரில் தொடர் ச்சியாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஜோ ரூட் (21) நிலைக்கவில்லை. மெகிதி ஹசன் வீசிய 35வது ஓவரின் முதல் மூன்று பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய ஜேசன் ராய், 4வது பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 153 ரன் (121 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.

மொசாதிக் ஹொசைன் வீசிய 38வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ஜாஸ் பட்லர், 33 பந்தில் அரைசதமடித்தார். மொர்டசா பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் இயான் மார்கன், சாகிப் பந்தை பவுண்டரிக்கு விரட்ட, இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த  போது சைபுதின் பந்தில் பட்லர் (64) அவுட்டானார். மெகிதி ஹசன் சுழலில் மார்கன் (35) சிக்கினார். பென் ஸ்டோக்ஸ் (6) ஏமாற்றினார்.

அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ், முஸ்தபிஜுர் பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்டார். மொர்டசா வீசிய 49வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பிளங்கட், சைபுதின்  வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது. வோக்ஸ் (18), பிளங்கட் (27) அவுட்டாக £மல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சைபுதின், மெகிதி ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் சவுமியா சர்கார் (2) ஸ்டெம்புகள் சிதற போல்டானார். மார்க் உட் பந்தில் தமீம் இக்பால் (19) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின் சாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் இருவரும் ஜோடி சேர்ந்தனர். சாகிப் அல் ஹசன் அதிரடியாக விளையாட மறுமுனையில் முபிகுர் அமைதிகாத்தார். இதையடுத்து ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி 3வது     விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், பிளங்கட் வேகத்தில் முஷ்பிகுர் (44) சரிந்தார். ரஷித் ‘சுழலில்’ மிதுன் (0) சிக்கினார். அதிரடியாக விளையாடிய சாகிப் அல் ஹசன் 95 பந்தில் சதம் விளாச வங்கதேச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

முக்கிய கட்டத்தில் ஸ்டோக்ஸ் திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் சாகிப் அல் ஹசன் கிளீன் போல்டானார். சாகிப் 121 ரன் (119 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்)  எடுத்தார். மகமதுல்லா (28), மொசாதக் ஹொசைன் (26), முகமது சைபுதீன் (5), மெகிதி ஹசன் (12) சொதப்பினர். கடைசியாக ஆர்ச்சர் பந்தில் முஸ்தபிஜுர்  ‘டுக்&அவுட்’ ஆக வங்கதேசம் 48.5 ஓவரில் 280 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மொர்டசா (4) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், ஜோப்ரா  ஆர்ச்சர் தலா 3, மார்க் உட் 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.


உலக சாதனை


வங்கதேசத்துக்கு எதிராக 386 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ந்து 7வது முறையாக ஒரு இன்னிங்சில் 300 அல்லது அதற்கு  மேல் ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது. இதன்மூலம் அதிக முறை இம்மைல்கல்லை எட்டிய அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு  முன், 2007ல் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் இப்படி ரன் சேர்த்திருந்தது.


386 ரன்கள்


வங்கதேசத்துக்கு எதிராக 386 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, உலக கோப்பை அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2011ல்  பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 328 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.


7வது முறை


முதல் ஓவரை வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் வீசினார். இதன்மூலம் இந்த சீசனில், 7வது முறையாக முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் வீசினார். இது,  இங்கிலாந்துக்கு எதிராக 3வது முறை.


8வது முறை


ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி, 8வது முறையாக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்தது.  இதன்மூலம் ஒருநாள் அரங்கில், 100 அல்லது அதற்கு மேல் அதிக முறை ரன் சேர்த்த இங்கிலாந்து ஜோடி வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஜோ ரூட்,  இயான் மார்கன் ஜோடி (11 முறை) உள்ளது.


9வது சதம்


அபாரமாக ஆடிய இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஒருநாள் அரங்கில் தனது 9வது சதமடித்தார். இவர், 77 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம்  குறைந்த இன்னிங்சில் 9வது சதமடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்தார். முதல் 4 இடங்களில் முறையே தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (52 இன்னிங்ஸ்),  குயின்டன் டி காக் (53), பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (61), இந்தியாவின் ஷிகர் தவான் (72) உள்ளனர்.


3 சதம்


இந்த சீசனில் இங்கிலாந்து சார்பில் இதுவரை 3 சதம் அடிக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து சார்பில் அதிக சதம் பதிவானது.  இதற்கு முன், 1975, 1983, 2007, 2015 தொடர்களில் தலா 2 சதம் அடிக்கப்பட்டது.


153 ரன்கள்


பொறுப்பாக ஆடிய ஜேசன் ராய், 153 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து  வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஸ்டிராஸ் (154 ரன், 2010) உள்ளார். தவிர, உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்      எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் ஜேசன் ராய். முதலிடத்தில் ஸ்டிராஸ் (158 ரன், எதிர்: இந்தியா, 2011, இடம்: பெங்களூரு) உள்ளார்.


கீழே விழுந்த அம்பயர்


முஸ்தபிஜுர் வீசிய 27வது ஓவரின் 5வது பந்தை அடித்த ஜேசன் ராய், பந்தை பார்த்தபடி ரன் எடுக்க ஓடினார். அப்போது மறுமுனையில் இருந்த அம்பயர் ஜோயல்  வில்சனும், பந்தை கவனித்தபடி நடந்து வந்தார். ஒருகட்டத்தில் ஜேசன் ராய் மோதியதில் அம்பயர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின் ஜேசன் ராய் உதவியுடன்  அம்பயர் எழுந்தார்.


4 ரன்


சாகிப் வீசிய 9வது ஓவரின் 2வது பந்தை அடித்த பேர்ஸ்டோவ், ஓடியே 4 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டியில் இது அரிதானது.


தொலைந்த பந்து


மொசாதக் ஹொசைன் வீசிய 38வது ஓவரின் 5வது பந்தை பட்லர் சிக்சருக்கு அனுப்பினார். மைதானத்தை விட்டு வெளியே சென்ற பந்து தொலைந்து போனது.  இதனால் புதிய பந்து வரவழைக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது.