போராடி வென்றது நியூசிலாந்து

பதிவு செய்த நாள் : 06 ஜூன் 2019

லண்டன்


வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ராஸ் டெய்லர் அரைசதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி  வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ்  வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், பீல்டிங்; தேர்வு செய்தார்.

வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் (25), தமிம் இக்பால் (24) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. அடுத்து வந்த சாகிப் அல் ஹசன், ஜேம்ஸ் நீஷம் வீசிய 23வது  ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். முஷ்பிகுர் ரஹிம் (19) ரன் அவுட் ஆனார். பொறுப்பாக ஆடிய சாகிப் (64), ஒருநாள் அரங்கில் தனது 44வது  அரைசதத்தை பதிவு செய்தார். முகமது மிதுன் (26), மகமதுல்லா (20) நிலைக்கவில்லை. சான்ட்னர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சைபுதின், பெர்குசன் பந்தில் ஒரு  பவுண்டரி விரட்டினார். மொசாதக் ஹொசைன் (11), மெகிதி ஹசன் மிராஸ் (8) ஏமாற்றினர். ஹென்றி வீசிய கடைசி ஓவரில் கேப்டன் மொர்டசா (1), சைபுதின் (29)  அவுட்டாகினர். வங்கதேச அணி 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல்&அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் ஹென்றி 4 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (25), கோலின் மன்ரோ (24) ஜோடி ஓரளவு கைகொடுத்தது. பின் இணைந்த கேப்டன்  வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி, வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது. முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டெய்லர், ஒருநாள்  அரங்கில் 48வது அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த போது மெகிதி ஹசன் பந்தில் வில்லியம்சன் (40) அவுட்டானார். டாம் லதாம்  டக்-அவுட் ஆனார். அபாரமாக ஆடிய டெய்லர் (82) நம்பிக்கை தந்தார். கோலின் டி கிராண்ட்ஹோம் (15), நீஷம் (25), ஹென்றி (6) நிலைக்கவில்லை. முஸ்தபிஜுர்  பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சான்ட்னர் வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி 47.1 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சான்ட்னர் (13), பெர்குசன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) வென்றார்.


200 போட்டிகள்


நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய சாகிப் அல் ஹசன், தனது 200வது ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 3வது  வங்கதேச வீரரானார். ஏற்கனவே மொர்டசா (209 போட்டிகள்), முஷ்பிகுர் ரஹிம் (207) இந்த இலக்கை அடைந்திருந்தனர்.


ஹாட்ரிக் வைடு


வங்கதேசத்துக்கு எதிராக 27வது ஓவரை வீசிய நியூசிலாந்தின் பெர்குசன், ஹாட்ரிக் வைடு வீசினார். இவர், இந்த ஓவரின் 4வது பந்தை தொடர்ந்து 3 முறை வைடாக  வீசினார்.