ரோகித்திற்கு கோஹ்லி பாராட்டு

பதிவு செய்த நாள் : 06 ஜூன் 2019

சவுத்தாம்டன்


‘எனக்கு தெரிந்து ரோகித்தின் ஆட்டத்தில் இதுவே சிறந்த இன்னிங்ஸ்’ என கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்த மெகா தொடரில் இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. முதலிரண்டு போட்டியில் தோற்ற நிலையில், இம்முறை இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்கா கடும் நெருக்கடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. தவிர, இந்திய அணிக்கு இது முதல் ஆட்டம் என்பதால் வீரர்கள் சற்று நெருக்கடியுடன் இருப்பார்கள் என சொல்லப்பட்டது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. முதலில் பும்ராவும், பின் சகாலும் மரிட்ட தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய  இந்திய அணிக்கு ரோகித் சர்மா சதம் அடித்து (122*) அசத்தினார். முக்கிய கட்டத்தில் ராகுல் (26), தோனி (34) கைகொடுத்தனர். இதையடுத்து இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி கூறியதாவது:

உலக கோப்பை போன்ற மெகா தொடரில் முதல் வெற்றி முக்கியம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இந்த போட்டியில் ரன்ரேட் பற்றி கவலைப்படவில்லை. அதைவிட வெற்றி மிக முக்கியம் என்பதை நன்கு உணர்ந்தோம். தவிர, ஆடுகளம் கடைசி வரை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்த தொடரில் ரோகித், தவான், நான் ஆகிய மூவரில் யாராவது ஓருவர் பெரிய இன்னிங்சை ஆடினால்தான் வெற்றி பெற முடியும் என நினைத்தேன். தவானும் நானும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதை மிகச் சரியான முறையில் ரோகித் பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ரோகித் சிரந்த வீரர். ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர். இருந்தும் என்னைப் பொறுத்தவரை இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே சிறந்த இன்னிங்சாக கருதுகிறேன். காரணம் இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் எடுப்பது சாதாரண காரியம் அல்ல, தனதுவழக்கத்திற்கு மாறான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். பேட்டிங்கை பொறுத்தவரை   பார்ட்னர்ஷிப் தான் முக்கியம். அந்த வகையில், ராகுல், தோனி இருவரும் ரோகித்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர். அதே போல் ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டத்தை சிறப்பாக முடித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பும்ரா பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அவரது வேகத்தை கணிக்க முடியாமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். தொடக்கத்தில் பும்ரா பந்துவீச்சு பிரமிப்பாக இருந்தது. துவக்கத்தில் அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகள்தான் தென் ஆப்ரிக்க அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க காரணமாக ருந்தது. தவிர, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எப்போதுமே சகால், குல்தீப் இருவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதை மனதில் கொண்டே இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில், இருவருமே சிறப்பாக செயல்பட்ட போதும் சகால் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. முக்கிய கட்டத்தில் இவர் அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்த தென் ஆப்ரிக்க அணியால் பெரிய ஸ்கோரை பதிவு செய்யமுடியாமல் போனது. பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. உண்மையைச் சொன்னால்  இந்த போட்டியில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதுவே வெற்றி பெற காரணமாக அமைந்தது. இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

ஆட்டநாயகன் விருது வென்ற ரோகித் கூறுகையில், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதிக அளவில் பந்து பவுன்ஸ் ஆனதால் எனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. தவிர, தவான், கோஹ்லி ஆட்டமிழந்த நிலையில், னெது வழக்கமான ஷார்ட்டுகளை விளையாடாமல் பொறுமை காத்தேன். எனக்கு ராகுல், தோனி இருவரும் சிறப்பான முறையில் கம்பெனி கொடுத்தார். என்னைப் போலவே பும்ரா, சகால் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். கடைசி வரை களத்தில் நின்ற அணிக்கு வெற்றி தேடித் தந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை (ஜூன் 9, லண்டன்) எதிர்கொள்கிறது.