ஸ்டார்க் வேகத்தில் விண்டீஸ் ‘புஸ்’

பதிவு செய்த நாள் : 06 ஜூன் 2019

நாட்டிங்காம்


உலக கோப்பை தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கூல்டர் நைல் (92), ஸ்டார்க் (5 விக்கெட்) கைகொடுக்க 15 ரன்னில் ஆஸி., வெற்றி பெற்று  அசத்தியது.

இங்கிலாந்தில் 12வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் இன்று நடந்த 10வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்  ஆஸ்திரேலியாவை எதிர்த்து முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் மோதியது. இரு அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் எளிதான வெற்றியை பதிவு  செய்தன. ஆப்கனை ஆஸி., வீழ்த்த பாகிஸ்தானை விண்டீஸ் பந்தாடியது. இந்த நிலையில், 2வது வெற்றி யாருக்கு என்பதற்கான போட்டியில் ‘டாஸ்’ வென்ற  வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் பவுலிங்கை தேரவு செய்தார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிராவோ நீக்கப்பட்டு எவின் லூயிஸ் சேர்க்கப்பட்டார்.  ஆஸி., அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

வெஸ்ட்இண்டீஸ் வேகத்தில் ஆஸி., விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்தன. வார்னர் (3), கேப்டன் ஆரோன் பின்ச் (6), கவாஜா (13), மேக்ஸ்வெல் (0), ஸ்டாய்னிஸ் (19) ஆகியோர் சொதப்பினர். ஆஸி., அணி 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்து திணறியது. இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித்துடன் அலெக்ஸ் கேரி இணைந்தார். ஒருமுனையில் ஸ்மித் பொறுப்புடன் விளையாட மறுமுனையில் கேரி அதிரடியில் இறங்கினார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்த நிலையில், ரசல் வேகத்தில் அலெக்ஸ் கேரி சரிந்தார். இவர் 45 ரன் (55 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அடுத்து கூல்டர் நைல் களம் வந்தார். இவர் துவக்கத்திலிருந்தே விண்டீஸ் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். இவரை கேப்டன் ஹோல்டரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பற ந்ததோடு சரிவிலிருந்து ஆஸி., மீளத் துவங்கியது.

தாமஸ் பந்தை ஸ்மித் மிட்விக்கெட் திசையில் சிக்சர் அடிக்க முயன்றார் ஆனால், எல்லை கோட்டருகே நின்றிருந்த கால்ட்ரல் அபாரமாக கேட்ச் பிடிக்க வெஸ்ட்இண்டீஸ் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 73 ரன் (103 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு102 ரன் சேர்த்தது. யார்  போனால் என்ன நான் இருக்கிறேன் என்ற தோணியில் கூல்டர் நைல் விளையாடி வந்தார். அதே நேரம் கம்மின்ஸ் (2) சொதப்பினார். ஒருகட்டத்தில் பவுண்டரி, சிக்சர் என விளாசிய கூல்டர் நைல் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இவர் 92 ரன் (60 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) ரன் எடுத்து பிராத்வைட் பந்தில் வெளியேறினார். இதே ஓவரில் ஸ்டார்க் (8) வெளியேற ஆஸி., 49 ஓவர் முடிவில் 288 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஜாம்பா (0) அவுட்டாகாமல் இருந்தார். விண்டீஸ் தரப்பில் பிராத்வைட் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார். தாமஸ், கார்ட்ரியல், ரசல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய வெஸட்இண்டீஸ் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. கம்மின்ஸ் வேகத்தில் எவின் லூயிஸ் (1) சரிந்தார். சற்றே அதிரடியாக விளையாடிய கெய்ல் (21) ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். பின் ஹோப்புடன் நிகோலஸ் பூரன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் எடுத்து வந்தனர். முக்கிய கட்டத்தில் ஜாம்பா திருப்புமுனை தந்தார். இவரது ‘சுழலில்’ பூரன் (40) சிக்கினார். ஹெட்மயர் (21) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹோப், 76 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 68 ரன் (105 பந்து, 7 பவுண்டரி) எடுத்து கம்மின்ஸ் பந்தில் வெளியேற ஆட்டம் பரபரப்பானது. ஸ்டார்க் வேகத்தில் ரசல் (15), பிராத்வைட் (16) சரிந்தனர்.

இருந்தும் கேப்டன் ஹோல்டர் போராடி வந்தார். இவர் 50 பந்தில் அரைசதம் அடித்தார். 4 ஓவரில் 37 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் ஹோல்டர் (51)  பெவிலியனன் திரும்ப ஆட்டம் ஆஸி., வசம் சென்றது. இதை உறுதி செய்யும் வகையில் கால்ட்ரல் (1) வெளியேறினார். முடிவில் வெஸ்ட்ண்டீஸ் 50 ஓவரில் 9  விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோற்றது. ஆஷ்லே நர்ஸ் (19), தாமஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் அபாரமாக பந்துவீசிய  ஸ்டார்க் 5 (10-1-46-5) விக்கெட் வீழ்த்தினார். கம்மின்ஸ் 2, ஜாம்பா 1 விக்கெட் சாய்த்தனர். பேட்டிங்கில் கலக்கிய கூல்டர் நைல் ஆட்டநாயகனாக தேர்வு  செய்யப்பட்டார்.